2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சுவாதி வழக்கில் சம்பந்தமில்லா சட்டத்தரணி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தையும் இந்தியாவையும், ஏன், இந்தியாவோடு தொடர்புடைய பல நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுவாதி கொலை வழக்கில், சம்பந்தமில்லாமல் ஆஜராகிய சட்டத்தரணி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவாதியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான ராம்குமார் சார்பில், கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருடைய சட்டத்தரணி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், பிணைக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆனால், இந்த பிணைக் கோரிக்கை, ராம்குமாரின் அனுமதியின்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, சென்னையின் அரச வழக்குத் தொடருநர் தெரிவித்தார். அது தவிர, ராம்குமாருக்கு ஏற்பட்ட பலத்த காயங்கள், அவரால் சுயமாக ஏற்படுத்தப்பட்டன அல்லவெனவும் அவரைக் கைதுசெய்த பொலிஸ் குழுவில் காணப்பட்ட ஒருவராலேயே ஏற்படுத்தப்பட்டனவெனவும், அச்சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராம்குமாரின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, குறித்த சட்டத்தரணியுடன் தொடர்புகள் எவையும் காணப்படவில்லை எனத் தெரிவித்தனர். இவ்வாறு அனுமதியின்றி எதற்காக பிணைக் கோரிக்கையை முன்வைத்தார் என கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, சிலரிடமிருந்து தனக்குப் பச்சைக்கொடி கிடைத்ததாக அவர் குறிப்பிட்ட போதிலும், அவர்கள் யாரென்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

இதேபோன்று, வன்புணர்வுக்குள்ளாக்ப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஜிஷா என்பவரது கொலை வழக்கிலும், அலூர் என்ற சட்டத்தரணி, கொலைச் சந்தேகநபர் சார்பாக ஆஜராகவுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னர் அவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி, தன்னிடம் இப்பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சந்தேகநபரின் குடும்பத்தினரோ, அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

சுவாதி, ஜிஷா ஆகியோரின் கொலை வழக்குகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி, தங்களுக்கான பிரபலத்தைத் தேடுவதற்காகவே, சட்டத்தரணிகள் இவ்வாறு அழையா விருந்தாளிகளாக வழக்குகளுக்குள் இவர்கள் புகுந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .