2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஜெயாவின் 68 சொத்துகள் அரச உடமைகளாகின்றன

Editorial   / 2017 மே 31 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குடன் தொடர்புடைய சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, தமிழக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1991-1996ஆம் ஆண்டு காலகட்டத்தில், வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு 1,000 மில்லியன் ரூபாயும் மற்ற 3 பேருக்கும் தலா 100 மில்லியன் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை, கடந்த பெப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்தமான 68 சொத்துகளைக் கைப்பற்றுமாறு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் உத்தரவின்படி, இந்தச் சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம் (டி.வி.ஏ.சி), கடிதம் எழுதியுள்ளது.

“நிலம், வீடு உள்ளிட்ட இந்தச் சொத்துகளை அடையாளம் கண்ட பின்னர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், அந்தந்த இடங்களில், ‘இது தமிழக அரசாங்கத்துக்குச் சொந்தமானது’ என்ற அறிவிப்புப் பலகைகளை வைப்பார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட இந்தச் சொத்துகள் தொடர்பாக, எந்தவித பரிமாற்றத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளுக்கு, மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்” என்று தமிழக அரசாங்கத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .