2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ட்ரம்ப் குறித்த இழுக்கான தகவல்களை ரஷ்யர்கள் ஆராய்ந்தனர்

Editorial   / 2017 மே 31 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த டொனால்ட் ட்ரம்ப், அவரது முன்னணி உதவியாளர்கள் குறித்த இழுக்கான தகவல்களைக் கொண்டிருப்பது குறித்து, ஐக்கிய அமெரிக்க புலனாய்வால் இடைமறிக்கப்பட்ட கலந்துரையாடல்களில், ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் கலந்துரையாடியதாக, முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் இருவரையும் காங்கிரஸ் தகவல்மூலமொன்றையும் மேற்கோள்காட்டி, சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.   

ஒரு தகவல் மூலம், தகவலை, நிதி தொடர்பானது என விவரித்ததுடன், ட்ரம்ப்பின் உள்வட்டத்தில், ரஷ்யர்கள் தாக்கம் செலுத்துகின்றனரா என்பதை மையப்படுத்தியே கலந்துரையாடல் அமைந்ததாகக் கூறியுள்ளது. இது தவிர, இழுக்கான தகவல் மூலமாக, நிர்வாகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய வல்லமையை தாங்கள் கொண்டிருப்பதாக, ரஷ்யர்கள் நம்பினர் என்பது, இடைமறிக்கப்பட்ட தொடர்பாடல்கள் மூலம் ஐக்கிய அமெரிக்க புலனாய்வுக்குத் தெரிய வந்ததாக, குறித்த தகவல்மூலம் தெரிவித்துள்ளது.   

எவ்வாறெனினும், தேர்தல் காலத்தின்போது ரஷ்யா மேற்கொண்ட பொய்யான தகவல்களை வழங்கும் பிரசாரத்தின் ஓர்  அங்கமாக, ரஷ்யர்கள் தொடர்பான மேற்கூறப்பட்ட கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம் எனவும், தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.   

மேற்படி தகவல்கள் பொய்யாக அமைந்தாலும், தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்கான வழிகள் குறித்து ரஷ்யா ஆராய்ந்தது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.   

இந்நிலையில், குறிப்பாக, ட்ரம்ப்பின் எந்த உதவியாளர்கள் கலந்துரையாடப்பட்டார்கள் என, எந்தத் தகவல் மூலமும் தெரிவித்திருக்கவில்லை. அமெரிக்கப் பெயர்களை, அறிக்கை மறைத்ததாகத் தெரிவித்த அதிகாரியொருவர், ஆனாலும், கலந்துரையாடல்கள், ட்ரம்பின் பிரசாரக் குழுவைச் சுற்றியதாகவே இருந்ததாகக் கூறியுள்ளார்.   

இதனையடுத்து கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகைப் பேச்சாளரொருவர், “யாரோவொரு தகவல் மூலங்கள் மூலம், ஜனாதிபதி மீது சேறு பூசுவதற்கான, பொய்யான, உறுதிப்படுத்தப்படாத இன்னொரு சுற்றுக் கருத்துகளே இவை. உண்மை என்னவெனில், ஜனாதிபதியின் கடந்த 10 ஆண்டுகள் வருமானத்தின் மீளாய்வில், எந்தவொரு நிதித் தொடர்புகளும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்க, மத்திய புலனாய்வு கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ) மறுத்து விட்டது. தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகமும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளினதும் கருத்துகளை அடைந்திருக்க முடியவில்லை. ட்ரம்ப்பின் பிரசாரக் குழுத் தலைவராக இருந்த மனபோர்ட், சட்டத்துக்கு புறம்பாக, எந்தவொரு நிதியையும் தான் பெறவில்லையெனவும், தான் எந்தத் தவறைச் செய்யவில்லையெனவும் மறுத்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X