2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘ட்ரம்ப் குறித்த இழிவான தகவல்கள் இல்லை’

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான, எந்தவொரு தவறான தகவலையும் கொண்டிருக்கவில்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தொலைக்காட்சியில், நேற்று  (04) ஒளிபரப்பப்பட்ட நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.   

என்.பி.சி நியூஸின் சண்டே நைட் வித் மேகன் கெலி நிகழ்ச்சியில், ஜனாதிபதி ட்ரம்ப் குறித்த இழிவான தகவல்களெவையையும் கொண்டிருக்கின்றீர்களா என வினவப்பட்ட நிலையிலேயே, “இது இன்னுமொரு முழுமையான அபத்தம்” என புட்டின் கூறியிருந்தார்.   

இதேவேளை, வர்த்தகராக, ரஷ்யாவுக்கு, ட்ரம்ப், முன்னர் விஜயம் மேற்கொண்டபோதும், ட்ரம்ப்புடன், தனக்கு எந்தத் தொடர்புமில்லையெனவும், தான் ஒருபோதும் ட்ரம்பைச் சந்திக்கவில்லை எனவும், ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், கடந்தாண்டு இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு மேற்கொள்ளப்பட்டமைக்கான எந்தவொரு நேரடி ஆதாரத்தையும் தான் காணவில்லை என்றும், ஜனாதிபதி புட்டின் கூறியுள்ளார்.   

இதேவேளை, ஜனாதிபதி ட்ரம்பின் மருமகனான ஜரேட் குஷ்னரால் முன்மொழியப்பட்ட, ரஷ்யாவுடன் பின்கதவு வழித் தொடர்பாடலை ஏற்படுத்துவது குறித்து, தனக்கெதுவும் தெரியாது எனவும், ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.   

இது தவிர, ஐக்கிய அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் சேர்ஜி கிஸ்லியாக், கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னர், ட்ரம்பின் பிரசாரக் குழுவுடன் தொடர்பைக் கொண்டிருந்தாரா எனவும் தனக்குத் தெரியாது என, ஜனாதிபதி புட்டின் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளினுடன், ரஷ்யத் தொலைக்காட்சி வலையமைப்பான ரஷ்யா டுடேயின் இரவுணவில், ஜனாதிபதி புட்டின், 2015ஆம் ஆண்டு டிசெம்பரில் தோன்றிருந்தார். இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி புட்டின், “நான் எனது உரையை ஆற்றினேன். பின்னர், நாங்கள் வேறு சில விடயங்களைப் பற்றிக் கதைத்தோம். அதன்பின்னர், நான் எழுந்து சென்றுவிட்டேன். அதனைத் தொடர்ந்து எனக்குக் கூறப்பட்டது, ‘உங்களுக்கு தெரியுமா, அமெரிக்க நபரொருவர் அங்கு இருந்தார், அவர் சில விடயங்களில் பங்கெடுத்துள்ளார். அவர், பாதுகாப்புச் சேவைகளில் இருந்துள்ளார்’” எனக் கூறியதுடன், “அத்துடன் முடிந்துவிட்டது. நான் அவருடன் சரியாகக் கதைக்கக் கூட இல்லை. இதுவே, பிளினுடனான எனது தொடர்பு” எனக் கூறியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X