2021 மே 15, சனிக்கிழமை

தடுத்து வைக்கப்பட்டோருக்கு $53 மில். வழங்குகிறது ஆஸி

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நடத்தப்படும், பப்புவா நியூ கினியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 அகதிக் கோரிக்கையாளர்களுக்கு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (53 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்) வழங்கப்படவுள்ளன.

அகதிக் கோரிக்கையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துக் கொள்ள, அவுஸ்திரேலிய அரசாங்கம் இணங்கியதைத் தொடர்ந்தே, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  

குறித்த தடுப்பு முகாமில், 2012ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,905 பேர், அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் அந்த முகாமை நடத்திய இரண்டு ஒப்பந்தக்காரர்களுக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்தனர்.  

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற அகதிக் கோரிக்கையாளர்களைத் தடுத்து வைப்பதற்காக, அவுஸ்திரேலியாவால் பயன்படுத்தப்படும் இரண்டு முகாம்களில், இந்த முகாமும் ஒன்றாகும். இந்த முகாம்களில், வசிப்பதற்குரிய நிலைமைகள் இல்லை எனவும் கட்டமைக்கப்பட்ட துஷ்பிரயோகமும் சித்திரவதையும் இடம்பெறுவதாகவும், தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.  

இந்த நிலையிலேயே, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் செய்தியை உறுதிப்படுத்திய அரசாங்கம், வழக்குக்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.  

தடுப்பு முகாம்களில் தற்போது வைக்கப்பட்டுள்ள, முன்னர் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு, இது வழங்கப்படவுள்ளது. இதன்படி, எவ்வளவு காலம், அங்கு தடுத்து வைக்கப்பட்டனர் என்பதைக் கருத்திற்கொண்டும், அவர்களுக்கு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் காயங்கள், நோய்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டும், இந்தப் பணம், பிரித்து வழங்கப்படவுள்ளது.  

அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்று, தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களை, ஐ.அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு, முடிவு காணப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில், தடுப்பு முகாம்களை நடத்துவதற்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .