2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தென்கொரிய ஜனாதிபதியின் எதிர்பார்ப்பில் அணுவாயுதமழிப்பு முக்கியம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை, நாளை (19) சந்திக்கவுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், அச்சந்திப்பில் முக்கியமான விடயமாக, கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதமழிப்புத் தொடர்பில் வலியுறுத்துவார் என, தென்கொரிய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்குக்குச் செல்லவுள்ள ஜனாதிபதி மூன், வடகொரியத் தலைவர் கிம்முடன், தனது மூன்றாவது சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். இச்சந்திப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதியின் எதிர்பார்ப்புகள் தொடர்பில், தென்கொரிய ஜனாதிபதி மாளிகை, நேற்று (17) அறிவித்தது.

“வடகொரியாவின் முன்னேற்றகரமான அணுவாயுதமழிப்புத் தொடர்பிலும், உண்மையான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் அதற்கான பதில் தொடர்பிலும், நாம் அழுத்தம் வழங்குவோம். புதியதும் சமாதானதுமான உறவுகளை ஏற்படுத்தும் வகையில், இது இடம்பெறும்” என, தென்கொரிய ஜனாதிபதியின் பணியாட்தொகுதியின் பிரதானி இம் ஜொங்-சியோக் தெரிவித்தார்.

வடகொரியத் தலைவர் கிம்மை, ஏற்கெனவே இரண்டு தடவைகள் இவ்வாண்டில் சந்தித்துள்ள ஜனாதிபதி மூன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவும், வடகொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவும், மேம்படுவதில் முக்கியமான பங்கை வகித்திருந்தார்.

ஆனால், ஐ.அமெரிக்கத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட கருத்துகளைக் கடுமையானதாகக் கருதிய வடகொரியா, அதற்கான எதிர்ப்புகளை அண்மைக்காலத்தில் வெளியிட, முழுமையான அணுவாயுதமழிப்புத் தொடர்பில் “ஒருதலைப்பட்சமான அழுத்தத்தை” வழங்கக்கூடாது என, அந்நாடு எச்சரித்தது. இதற்கான பதிலடியாக, வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் விஜயத்தை, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரத்துச் செய்திருந்தார்.

இவற்றுக்கு மத்தியிலேயே, வடகொரிய, தென்கொரியத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பிலும், அணுவாயுதமழிப்புத் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுமென தென்கொரியா அறிவித்திருக்கும் நிலையில், அவ்வறிவிப்பை வடகொரியா எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது தான், கேள்வியாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--