2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தனிப்பட்ட மின்னஞ்சல் விவகாரத்தில் தவறிழைத்தார் ஹிலாரி

Shanmugan Murugavel   / 2016 மே 26 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக இருந்த காலத்தில், தன்னுடைய அலுவலகத் தேவைகளுக்கானத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்திய விடயத்தில், ஹிலாரி கிளின்டன் தவறிழைத்துள்ளதாக, இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக விசாரணையொன்று தெரிவித்துள்ளது.

இராஜாங்கத் திணைக்களத்தின் பொலிஸ் பிரதானியால் வெளியிடப்பட்டுள்ள இந்த விசாரணை முடிவுகளின் படி, தனது வீட்டில் மின்னஞ்சல் வழங்கியை வைத்து, மின்னஞ்சலைப் பயன்படுத்த எடுத்த அவரது முடிவு, அதிகளவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரிக்கு முன்னதாக இருந்த இராஜாங்கச் செயலாளர்கள் உட்பட உயரதிகாரிகளது ஆவணப்படுத்தும் செயற்பாட்டையும் விமர்சனத்துக்குட்படுத்திய அவ்வறிக்கை, இராஜாங்கத் திணைக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அனைத்து மின்னஞ்சல்களையும் சமர்பித்தாவது சென்றிருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவல் பாதுகாப்பில் குறைபாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, தனது மின்னஞ்சல் வழங்கி தொடர்பாக, திணைக்களத்தின் தகவல் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளிடம் ஹிலாரி கேட்டிருந்தால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்காது எனவும், 2011ஆம் ஆண்டில், அவரது மின்னஞ்சல் வழங்கியை ஹக் செய்யப்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ஹிலாரியே தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவர் மீதான நம்பிக்கைத் தன்மை, குறைவாகவே காணப்படுகிறது. தற்போது, இந்த அறிக்கையும் வெளியாகியுள்ளமை, அவர் மீதான நம்பிக்கையீனத்தை இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .