2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

துருக்கியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சிக்கு பதிலீர்ப்பாக, மூன்று மாதங்களுக்கு, துருக்கி அவசரகால நிலையின் கீழ் இருக்கும் என ஜனாதிபதி ரீசெப் தயீப் ஏர்டோவான் அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர்களுடனான சந்திப்பினையடுத்தே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி அறிவிப்பொன்றில் ஏர்டோவான் புதன்கிழமை (20) தெரிவித்துள்ளார்.

தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சி முயற்சியில் பங்கெடுத்த அனைத்து பயங்கரவாத அமைப்பு காரணிகளையும் அகற்றும் பொருட்டு, அவசரகால நிலை தேவைப்படுவதாக, துருக்கியின் தலைநகர் அங்காராவிலிருந்து உரையாற்றும்போது ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

தமது நாடு எதிர்நோக்குகின்ற பயங்கரவாத ஆபத்தின் மத்தியில், கட்டாயம் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனித்த காரணத்துக்காக மட்டுமே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவித்த ஏர்டோவான், இராணுவத்தில் இருக்கின்ற வைரஸை துடைத்தொழிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, புதன்கிழமை (20) முன்னர் இடம்பெற்ற நேர்காணலொன்றில், இராணுவப் புரட்சி முயற்சி, முற்றாக நிறைவு பெற்றது என்பது தொடர்பில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்த ஏர்டோவான், தாங்கள் இதன் நிறைவுக்கு வந்துள்ளோம் என நினைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

குர்திஷ் ஆயுதக் குழுக்களுக்கெதிராக 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலையடுத்து, துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையானது, 2002ஆம் ஆண்டு நீக்கப்பட்டிருந்தது.

துருக்கியின் அவசரகால நிலையின் கீழ், ஜனாதிபதிக்கே பெரும்பாலான அதிகாரங்கள் இருக்கும் என்பதுடன், உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லாமல், ஊரடங்குகள் அமுல்படுத்தப்பட முடியுமென்பதுடன், ஒன்றுசேருதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்ய முடியும். இது தவிர, ஊடகங்களும் கட்டுப்படுத்தப்பட முடியுமென்பதுடன், தனிநபர்கள், வாகனங்கள், உடமைகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 600க்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், துருக்கியின் உயர் கல்வி செயற்குழு, கல்விக் காரணங்களுக்காக  கல்வியயாளர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டதுடன், வெளிநாட்டில் உள்ள கல்வியலாளர்களை, உடனடியாக நாட்டைத் விட்டுத் திரும்புமாறு, அரச ஊடகமும் துருக்கி அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு ஈராக்கிலுள்ள, குர்திஷ் தொழிலாளர்கள் கட்சியின் (பி.கே.கே) அங்கத்தவர்கள் மீது, புதன்கிழமை (20) துருக்கி இராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில், 20 பேர் கொல்லப்பட்டதாக துருக்கியின் அரச செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X