2021 ஜனவரி 27, புதன்கிழமை

நீர்ப்பீச்சு வதை வந்தால் பதவி விலகுவேன்: சி.ஐ.ஏ பணிப்பாளர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் கொடிய சித்திரவதை முறைகளுள் ஒன்றாகக் கருதப்படும் நீர்ப்பீச்சு வதை முறை, அமெரிக்காவால் மீண்டும் கொண்டுவரப்பட்டால், தனது பதவியிலிருந்து விலகப் போவதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) பணிப்பாளரான ஜோன் பிரென்னன் எச்சரித்துள்ளார். இந்தக் கருத்தை வெளியிடும் போது, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை அவர் நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், அவரின் கருத்துகளுக்குப் பதிலடியாகவே, அவரது இந்தக் கருத்து அமைந்துள்ளது.

நீர்ப்பீச்சு வதை எனப்படும் இந்தச் சித்திரவதை முறையில், சந்தேகநபரொருவரின் கைகளையும் கால்களையும் இறுகக் கட்டிவிட்டு, அவரது முகத்தில் துணியால் மூடிவிட்டு, அதன் மேல் தண்ணீர் ஊற்றப்படும். இதன்போது அவருக்கு, நீச்சல் தெரியாத ஒருவர், தண்ணீரில் மூழ்குவது போன்ற உணர்வும் மூச்சடைவும் ஏற்படும்.

மிகவும் புராதன கால சித்திரவதை முறையான இம்முறை, முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பராக் ஒபாமா ஜனாதிபதியாக வந்த பின்னர், அந்த முறையை நிறுத்துவதற்கான நிறைவேற்று அதிகாரப் பணிப்புரையை ஒபாமா விடுத்திருந்தார். இந்த முறைக்கு, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவிப்பதோடு, இதை மீண்டும் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜோன் பிரென்னன், "சி.ஐ.ஏ-இன் பணிப்பாளராக நான் இருக்கும் வரை, ஜனாதிபதி என்ன சொன்னாலும் கூட, (நீர்ப்பீச்சு வதைக்கான) உத்தரவை வழங்கும் பணிப்பாளராக நான் இருக்கப் போவதில்லை. வேறொரு பணிப்பாளரை அவர்கள் தேட வேண்டியிருக்கும்" என்றார்.

இதற்கு முன்னரும், நீர்ப்பீச்சு வதைக்கு எதிரான பிரென்னன் கருத்துத் தெரிவித்த போதிலும், பதவி விலகுவேன் என நேரடியாகத் தெரிவித்திருப்பது, முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .