2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ் வலைப்பதிவரின் கொலை தொடர்பில் மூவர் கைது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷை தளமாகக் கொண்ட வலைப்பதிவர் நிலாத்ரி சட்டர்ஜி நிலோயின் கொலை தொடர்பில் மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மதச்சார்பற்ற வலைப்பதிவர் கடந்த ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில், அவரது வீட்டுக்குள் கத்திகளுடன் நுழைந்த குழுவொன்றினால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலையானது, இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷில், இடம்பெற்ற இதே மாதிரியான நான்காவது கொலையாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், நிலோயை, பேஸ்புக்கில் மிரட்டியமை தொடர்பிலும் அடுத்த இருவரும் கொலைக்கான பொறுப்பை இணையத்தில் ஏற்றுக்கொண்டமை தொடர்பிலுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும், முப்தி மௌலானா அப்துல் கஃபார், இஸ்லாமி சத்ர ஷிபிர் தலைவர்களான மோர்ட்டுசா சபீர் பைஸல், தரிகுல் இஸ்லாம் ஆகியோரே என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷின் பிரதான மதக் கட்சியும், இருபது கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியில் அங்கத்துவம் வகிப்பதுமான ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மாணவர் பிரிவே ஷிபிர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடக்கு பங்களாதேஷில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளங்காணப்படாத மூன்று தாக்குதலாளிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த, மிஷனரியில் பணிபுரியும் இத்தாலிய வைத்தியர் கழுத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாத இறுதியிலும் ஒக்டோபர் மாத ஆரம்பத்திலும் வேறொரு இத்தாலியர் ஒருவரும் ஜப்பானியர் ஒருவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .