2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பிரேஸில் முன்னாள் ஜனாதிபதிக்கு 9.5 ஆண்டுகள் சிறை

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 9 ஆண்டுகள், 6 மாதங்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளுள் ஒருவரான அவருக்கான இந்தச் சிறைத்தண்டனை, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறுவதற்கு அதிகமான வாய்ப்புகளைக் கொண்டவராகக் கருதப்படும் லுலா ட சில்வா, தற்போது சிறையிலடைக்கப்படவுள்ளமை, நாட்டின் அரசியலில் மாபெரும் இடைவெளியை ஏற்படுத்துமென அறிவிக்கப்படுகிறது.

2003ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவிவகித்த அவர், "உலகில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி" என, அப்போது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவால் புகழப்பட்டிருந்தார். அவரே, தற்போது சிறையை எதிர்நோக்கியுள்ளார்.

பொறியியல் நிறுவனமொன்றிடமிருந்து, 1.2 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இலஞ்சத்தைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில், அவரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி சேர்ஜியோ மொரோ, அவரைச் சிறையிலடைத்தார்.

லுலா ட சில்வாவின் கடற்கரை பங்களா ஒன்றை மெருகூட்டி, அதற்குப் பதிலாக, நாட்டின் தேசிய ஒப்பந்தங்கள் பலவற்றை அவர் பெற்றுக் கொண்டார் என்றே, வழக்குத் தொடருநர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

தனது தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்தத் தீர்ப்புத் தொடர்பாக, தனிப்பட்ட திருப்தி எதனையும் தான் அடையவில்லை என்றும், அதற்கு மாறான உணர்வையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். "இந்தக் குடியரசின் ஜனாதிபதிகளுள் ஒருவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளமை, வருந்தத்தக்கது" எனக் குறிப்பிட்டார்.

எனினும், லுலா ட சில்வா, குற்றமிழைக்காதவர் எனவும் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்த அவரின் சட்ட அணி, இது குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்யவுள்ள நிலையில், மேன்முறையீட்டுத் தீர்ப்பு வரும் வரை, சிறைக்குள் அவர் செல்ல வேண்டிய தேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .