2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

'பொலிஸ் காவலில் இந்தியர்கள் இறக்கின்றனர்'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பொலிஸார், தங்களது தடுப்பிலுள்ள சந்தேகநபர்களைத் துன்புறுத்தி, அவர்களைக் கொலை செய்வதாகவும், அதற்கு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. அவ்வாறு ஏற்படும் மரணங்களை, தற்கொலை அல்லது இயற்கையான காரணங்களால் ஏற்பட்ட மரணங்கள் என, அப்பொலிஸார் தெரிவிப்பதாகவும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

"'சகோதர உணர்வால் கட்டுண்டார்': பொலிஸ் தடுப்பில் ஏற்படும் கொலைகளைத் தடுக்கத் தவறிய இந்தியா" என்ற பெயரில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய 4 மொழிகளில், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில், பொலிஸ் தடுப்பில் வைத்து, குறைந்தது 675 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், கைதுசெய்யப்படும் சந்தேகநபரை, 24 மணித்தியாலங்களுக்குள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் போன்ற கைதுக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பொலிஸார் தவறுகின்றமையால், இவ்வகையான மரணங்களில், பொலிஸார் சிக்குவதிலிருந்து தப்புகின்றனர் என, அக்கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையை உருவாக்குவதற்காக, பொலிஸ் தடுப்பில் ஏற்பட்ட 17 மரணங்களை, கண்காணிப்பகம் ஆராய்ந்தது. இதற்காக, உயிரிழந்தோரின் குடும்பங்க், சாட்சிகள், நீதித்துறை நிபுணர்கள், பொலிஸ் அதிகாரிகள் என, 70க்கும் மேற்பட்ட நேர்காணல்களை, அக்கண்காணிப்பகம் நடத்தியது.

இதன்போது, சரியான நடைமுறைகளைப் பொலிஸார் பின்பற்றாததோடு, தடுப்பில் காணப்பட்ட சந்தேகநபர்களை, பொலிஸார் துன்புறுத்தியமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

"இந்த மரணங்கள், பகிரங்க வெளியில் நடப்பதில்லை என்பதால், தங்களது சக ஊழியர்களைக் காக்க விரும்பும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில், மரணங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை நிரூபிப்பது கடினம்" எனத் தெரிவித்த இந்த அறிக்கையின் ஆசிரியர் ஜெய்ஶ்ரீ பஜோரியா, "பொலிஸில் பொறுப்புக்கூறுதல் என்பது குறைவாகக் காணப்படும் நிலையில், பொலிஸ் தடுப்பில் ஏற்படும் மரணங்களுக்கு, சட்டவிலக்களிப்பு நிலைமை காணப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

தங்களது தடுப்புக் காவலில் ஏற்படும் மரணங்களுக்குத் தற்கொலை, நோய், அல்லது இயற்கையான காரணங்கள் ஆகியவற்றைப் பொலிஸார் கூறுகின்ற போதிலும், மரணவிசாரணை அறிக்கைகளின் போது, துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .