2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வடகொரியா மீது கடுமையான தடைகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 03 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா மேற்கொண்ட அணுகுண்டுச் சோதனை, ஏவுகணை ஏவுதல் ஆகியவற்றுக்காக, வடகொரியா மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவும் வடகொரியாவின் பிரதான தோழமை நாடான சீனாவுக்குமிடையில், 7 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான பேரம்பேசலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்தத் தீர்மானம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

புதிய நடவடிக்கைகளின் அடிப்படையில், வடகொரியாவிருந்து வரும், வடகொரியாவுக்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும், அனைத்து விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் சோதிக்க வேண்டுமென அனைத்து நாடுகளையும் கோருகிறது. அத்தோடு, நிலக்கரி, இரும்பு, இரும்புத் தாது, ஏனைய கனிமங்கள் ஆகியவற்றை வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுவதோடு, றொக்கெட் எரிபொருள் உட்பட விமான சேவைக்குப் பயன்படும் அனைத்து எரிபொருட்களையும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

'நிலக்கரி ஏற்றுமதியென்பது வடகொரியாவின் முக்கியமான வருமான வழியாகும். நிலக்கரி ஏற்றுமதி மூலம், வருடாந்தம் ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வருமானமாக, அந்நாடு பெறுகிறது. இது, அந்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் மூன்றிலொரு பகுதியாகும். இரும்புத்துத் தாது ஏற்றுமதி மூலம், ஏறத்தாழ 200 மில்லியன் அமெரிக்க டொலரை, அந்நாடு பெறுகிறது" என, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர், சபையில் தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையின் அண்மைக்கால வரலாற்றில், நாடொன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகபட்சத் தடை இதுவாகும். எனினும், இதன் அமுலாக்கம் குறித்தே, இன்னமும் கேள்விகள் காணப்படுகின்றன. குறிப்பாக, ரஷ்யாவும் சீனாவும், இந்தத் தடைகளை எந்தளவு தூரத்தில் அமுலாக்குகின்றன என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது.

இந்தத் தடைகளை வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இத்தீர்மானம், 'உறுதியான, ஒற்றுமையான, பொருத்தமான பதில்" எனத் தெரிவித்தார். 'சர்வதேச சமூகம், ஒரே குரலில், வடகொரியாவுக்கு இலகுவான செய்தியொன்றை அனுப்பியுள்ளது: இவ்வாறான ஆபத்தான வேலைத்திட்டங்களை வடகொரியா கைவிட வேண்டுமென்பதோடு, அதன் மக்களுக்கு வேறு சிறப்பான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை, தென்கொரியா உள்ளிட்ட ஏனைய பல நாடுகளும் வரவேற்றுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--