2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'வெட்கத்துக்கான உலகக் கிண்ணம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்காக, அதிநவீன விளையாட்டரங்கொன்றையும் அதற்கு அண்மையிலுள்ள பகுதிகளையும் நிர்மாணித்துவரும் ஊழியர்கள், மிக மோசமான நிலைமைகளின் கீழ் பணியாற்றிவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்று மீளச்சுட்டிக்காட்டியுள்ளது.

'வெட்கத்துக்கான உலகக் கிண்ணம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இந்தப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டுப் பணியாளர்கள், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் அதேநேரத்தில், சர்வதேச கால்பந்தாட்டச் சபை, இலாபங்களை உழைத்துவருவதாக அவ்வறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களே, இவ்வாறு சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாவதாக அறிவிக்கப்படுகிறது.

காலிபா விளையாட்டரங்கு என அழைக்கப்படும் அந்த அரங்கையும் அஸ்பயர் வலயம் என அழைக்கப்படும் அதனைச் சூழவுள்ள தோட்டங்களும் விளையாட்டு வசதிகளையும் நிர்மாணித்துவரும் ஊழியர்கள், எட்டு வகையான விதங்களில் சுரண்டப்படுவதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காகப் பணிக்கமர்த்தப்பட்ட ஊழியர்கள், அதிக பணத்தைச் செலுத்தியே இந்தத் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், அத்தொகை 500 தொடக்கம் 4,300 அமெரிக்க டொலர் வரையிலான தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணிவாய்ப்பு வழங்கப்படும் போது உறுதியளிக்கப்பட்ட ஊதியத்தை விடக் குறைவான ஊதியமெ வழங்கப்படும் நிலை காணப்படுவதாகவும், அவை குறித்துச் சுட்டிக்காட்டப்படும் போது, குறித்த ஊழியர்களின் முறைப்பாடுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலோர் ஊழியருக்கு, மாதாந்தம் 300 அமெரிக்க டொலர் ஊதியம் உறுதியளிக்கப்பட்டதாகவும் ஆனால் 190 டொலர் மாத்திரமே தற்போது வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர, ஊதியங்கள் தாமதிக்கப்படுவதாகவும், சில வேளைகளில் சில மாதங்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகள், மிகவும் மோசமானவையாகக் காணப்படுவதோடு, கட்டாரின் சட்டத்தின்படி, ஓர் அறைக்கு நால்வர் மாத்திரமே அதிகபட்சமாக அனுமதிக்கப்படலாம் என்ற போதிலும் எட்டுப் பேர் தங்கும் நிலைமைகளும் காணப்படுகின்றன. அத்தோடு, தங்குமிட அடையாள அட்டை வழங்கப்படாததன் காரணமாக, அவர்களது தங்குமிடத்தையும் பணியிடத்தையும் தாண்டி, வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டாரை அடைந்த பின்னர், அவர்களின் கடவுச்சீட்டு, தொழில் வழங்குநர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலையை விட்டுச் செல்லவோ அல்லது வேறு வேலைக்கு மாறுவதற்கோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக முறையிட்டால், அவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையாளர்கள், அச்சம்மேளனத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X