2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஹக்கிங்கில் குடியரசுக் கட்சியும் இலக்கு வைக்கப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாகவே ரஷ்யாவைச் சேர்ந்த ஹக்கர்கள் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு, மேலும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட லின்ட்ஸி கிரஹாம், தனது பிரசாரக் குழுவின் இணையக் கணக்குகள் ஹக் செய்யப்பட்டதாகத் தற்போது வெளிப்படுத்தியுள்ளமையே, அதற்கான காரணமாகும்.

இந்தத் தேர்தலில், ட்ரம்ப்பை வெற்றிபெறச் செய்வதற்காகவே, ரஷ்யாவைச் சேர்ந்த ஹக்கர்கள் செயற்பட்டனர் என, மத்திய புலனாய்வு முகவராண்மையால் (சி.ஐ.ஏ) முடிவு செய்யப்பட்டதோடு, பிரதான இரு கட்சிகளையும் சேர்ந்த மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்டாலும், ஜனநாயகக் கட்சியின் இரகசியத் தகவல்கள் மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை, டொனால்ட் ட்ரம்ப் மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, நவம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்புக்கு 3 மாதங்கள் முன்னதாகவே, தனது பிரசாரக் குழுவின் மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்டதாக, மத்திய புலன்விசாரணைத் திணைக்களத்திடம் (எஃப்.பி.ஐ) முறையிட்டதாக, கிரஹாம் வெளிப்படுத்தியுள்ளார்.

"ஜனநாயகக் கட்சிதேசிய செயற்குழுவுக்குள் ரஷ்யர்கள் ஹக் செய்தார்கள் என நான் நம்புகிறேன். பொடெஸ்டாவின் (ஹிலாரியின் பிரசாரக் குழுத் தலைவர்) மின்னஞ்சல் கணக்குக்குள் அவர்கள் புகுந்தார்கள் என நம்புகிறேன். எனது பிரசாரக் குழுக் கணக்குக்குள் அவர்கள் புகுந்தார்கள். பகிரங்கமாக வெளியிடப்பட்ட அனைத்துத் தகவல்களும், கிளின்டனைப் பாதித்தன என்றும் ட்ரம்ப்பைப் பாதிக்கவில்லை என்றும் நான் நம்புகிறேன்" என கிரஹாம் தெரிவித்தார். எனினும், இந்தத் தேர்தல் முடிவில் சந்தேகம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல்களை வெளியிட்ட பின்னர், தனது டுவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்த அவர், ரஷ்யாவுக்கெதிராக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதிகமான தடைகளை விதிக்க வேண்டுமெனவும் தனது நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, பலனை அனுபவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .