2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சூடான் ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடான சூடானின், டாபர் பகுதியில் பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், ஆட்சியிலுள்ள அரேபிய அரசு, அவர்களது போராட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக இராணுவ ரீதியில் ஒடுக்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பர், மசாலித், ஷகாவா இன மக்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து, அப்பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஜன்ஜாவீட் என்ற அந்நாட்டு அரசுக்கு ஆதரவான பயங்கரவாதப் படையினர் மேற்படி பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின.

பொது மக்கள் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், வீடுகளுக்குத் தீ வைத்தல், உணவுப் பொருட்களை கொள்ளையிடுவதன் மூலம் அம்மக்களை பட்டினியால் தவிக்கவிட்டு சாகடிப்பது போன்ற குற்றச் செயல்களில் குறித்த படையினர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், குறித்த பயங்கரவாதப் படையினருக்கு சூடான் அரசாங்கமும் இராணுவத்தினரும் ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இதனையடுத்து குறித்த இனப்படுகொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை கைது செய்ய கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதனை எதிர்த்து ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி 4 மாதங்களுக்கான முன்பிணை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கினை நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், குறித்த மனுவினை நிராகரித்ததோடு, அவர் மீது இனப் படுகொலை தொடர்பாக 3 குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்தமை, அதன் மூலம் அப்பகுதி மக்களை உளவியல் ரீதியாக அச்சத்தி்ல் ஆழ்த்தியமை மற்றும் உரிமைக்கு போராடுவோர் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தமை போன்ற 3 குற்றச்சாட்டுகளே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சூடான் ஜனாதிபதியை, ஏனைய நாடுகளும் கைது செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .