2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பராக் ஒபாமா மே மாதம் பிரித்தானியாவுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளமையை பிரித்தானிய பாக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் அவரது பாரியார் லோரா ஆகியோர் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர்; அமெரிக்க ஜனாதிபதியொருவர் பிரித்தானியாவுக்கு அந்நாட்டின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளும் முதலாவது  உத்தியோகபூர்வ  விஜயம் இதுவாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி – 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பராக் ஒபாமா பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். எனினும், பிரித்தானிய அரச தலைவரின் அழைப்பின் காரணமாக அது உத்தியோகபூர்வ விஜயமாக அமையவில்லை.

கடந்த வருடம் ஜுலை மாதம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் வொஷிங்டனுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பராக் ஒபாமா பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பராக் ஒபாமாவின் பிரித்தானியாவுக்கான விஜயத்தின்போது முதற் பெண்மணியும் அவரது பாரியாருமான மிச்சேல் ஓபமாவும் உடன் செல்லவுள்ளார். இருப்பினும் இவ்விஜயத்திற்கான மேலதிக விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை பராக் ஒபாமாவின் இவ்விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரித்தானியப் பிரதமரின் பேச்சாளர், பராக் ஒபாமாவின் இவ்விஜயம் குறித்து பிரித்தானியப் பிரதமர் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை பிரதிபலிக்கின்றதெனவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .