2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி ஆபத்திலிருந்து மீண்டார்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானின் ஸ்வெட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 12 வயது சிறுமியொருவரின் தலையிலிருந்து தோட்டாவை அகற்றியுள்ளதாக பாகிஸ்தானிய சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மேற்குபகுதியில் உள்ள ஸ்வெட் பள்ளத்தாக்கில், பெண்களின் கல்வி நிலை குறித்து பிரசாரம் செய்துவரும் மலாலா யூசப்ஸாய் என்ற சிறுமியும் மற்றும் வேறு இரு சிறுமிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் செல்லும் வழியில் தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.

சத்திரசிகிச்சையின் பின்னர் மேற்படி சிறுமியின் நிலை தற்போது தேறிவருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மதச்சார்பின்மையை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி சிறுமி பிரசாரங்களில் ஈடுபடுவதால் அச்சிறுமியை குறிவைத்துள்ளதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

'அச்சிறுமி உயிருடன் இருந்தால் அவர் மீண்டும் கொல்லப்படுவார்' என தீவிரவாத இயக்கத்தின் பேச்சாளர் இஷனுள்ளா இஷான் பிபிசியின் உறுதுசேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி சிறுமியை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இஸ்லாமாபாத்தின் பிபிசி செய்தியாளர் அலீம் மெக்பூல் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான  சிறுமிகளில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன், ஏனைய சிறுமிகள் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மலாலா யூசப்ஸாய், பாடசாலை செல்லும் வயதிலேயே  பாகிஸ்தானில் அனைவராலும் அறியப்பட்டவர்.  இளம் வயதிலே மிகவும் தைரியமாக தலிபான்களை விமர்சித்த இவர், பெண்களுக்கு கல்வி அறிவு ஒன்றே அவர்களை வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் அடையாளப்படுத்தும் என்று கூறி தெளிவான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

யூசப்ஸாய் என்ற மேற்படி சிறுமி 11 வயதாக இருக்கும்போது நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் தலிபான்கள் ஸ்வெட் பள்ளத்தாக்கை பொறுப்பெடுத்துக்கொண்டதன் பின்னர் பெண்களுக்கான பாடசாலைகளை மூடிவிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

இதன்போது மேற்படி யூசப்ஸாய் தனது நாட்குறிப்பினூடாக  தீவிரவாதிகளினால் ஏற்பட்ட அவலங்களை உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டு வந்திருந்தார்.

அவர் மேற்படி நாட்குறிப்பை கல்மாகய் என்ற புனைப்பெயரில் எழுதிவந்துள்ளார். துணிச்சல் மிக்க பெண்ணுக்கான தேசிய விருது மற்றும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது போன்றவற்றிற்கு யூசப்ஸாயின் பெயர் பரிந்துரைசெய்யப்பட்டபோது தலிபான்கள் யூசப்ஸாய் குறிப்பறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யூசப்ஸாய் குணமடைய வேண்டுமென கோரி அந்நாட்டின் பாடசாலை மாணவர்களால் சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து  போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .