2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தலைவர் ராஜினாமா

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பான “சிஐஏ” வின் தலைவர் டேவிட் பெட்ரேயஸ் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

திருமண பந்தத்தில் இணைந்திருந்தபோதிலும் வெளியில் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெரிதும் கௌரவிக்கப்பட்ட நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெனரல் பெட்ரேயஸ், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு தலைமையேற்றிருந்தவர்.

பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதத்தை புத்தகமாக எழுதிய பௌலா பிரோட்வெல் என்ற பெண்ணுடன் பெட்ரேயஸ் தொடர்பு வைத்திருந்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறினர்.

2011ஆம் ஆண்டு வெளியான பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதையை எழுதுவதற்காக ஆப்கானிஸ்தானில் அவருடன் மாதக்கணக்கில் பேசிப், பழகி வந்தவர் பௌலா பிரோட்வெல் ஆவார்.

மேலும் பெட்ரேயஸ் பயின்ற அதே இராணுவப் பயிற்சிப் பள்ளியில் இந்தப் பெண்ணும் பட்டம் பெற்றுள்ளார்.

பௌலா பிரோட்வெல் பற்றி நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய ஒரு விசாரணையின்போது பெட்ரேயஸுடன் அவருக்கிருந்த உறவு பற்றி தெரியவந்தது.

தொடர்பு இருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ள ஜெனரல் பெட்ரேயஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

37 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்த பின்னர், திருமணத்துக்கு வெளியில் தொடர்பு வைத்துக்கொள்ள முடிவெடுத்தது ஒரு மோசமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கணவனாகவும், நாட்டுடைய முக்கிய உளவு அமைப்பின் தலைவர் என்ற நிலையிலும், தான் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்துக்கொள்வது என்பது சாதாரணமாக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரமானாலும் நாட்டின் மிக முக்கிய ரகசியங்களுக்கு பொறுப்பானவர் என்ற ஒரு பதவியில் இருக்கும்போது அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படாது.

பெட்ரேயஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தேசப் பற்றுடனும் அர்ப்பணிப்புடனும் அமெரிக்காவுக்காக தசாப்த காலங்களாக பணிபுரிந்தவர் ஜெனரல் பெட்ரேயஸ் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கான தலைமைத் தளபதியாக இருந்த பெட்ரேயஸ், சென்ற வருட மத்தியில் அப்பொறுப்பிலிருந்து சி.ஐ.ஏ உளவு அமைப்பின் தலைவராக ஜனாதிபதி ஒபாமாவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் செல்வதற்கு முன்பாக ஈராக்கில் சர்வதேச படைகளின் தலைமைத் தளபதியாகவும் இவர் பங்காற்றியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2ஆவது தடவையாகவும் பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்டு நான்காவது நாளில் ஜெனரல் பெட்ரேயஸ் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (பிபிஸி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .