2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

GOP மாநாட்டில் முதல்நாளிலேயே ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் "மிகப்பெரும் பழைய கட்சி" (Grand Old Party - GOP) என அழைக்கப்படும் குடியரசுக் கட்சியின், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான தேசிய மாநாடு, குழப்பங்களுடன் ஆரம்பித்தது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி 18ஆம் திகதி) ஆரம்பித்த இந்த மாநாடு, குழப்பகரமானதாக அமையுமென்ற எதிர்பார்ப்பு, ஏற்கெனவே காணப்பட்ட போதிலும் கூட, முதல் நாளிலேயே குழப்பங்கள் ஏற்பட்டமை, கவனிக்கத்தக்கதாக அமைந்தது.

குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்குத் தேவையான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை, குடியரசுக் கட்சியின் கணிசமானோரின் ஆதரவை இன்னும் பெறவில்லை என்பதையும் கட்சிக்குள்ளேயே அவருக்கான எதிர்ப்புக் காணப்படுகின்றது என்பதையும், இது வெளிப்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பைத் தெரிவுசெய்வது, நேரடியாக இடம்பெறக்கூடாது எனவும் அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும், ட்ரம்ப்புக்கு எதிரான பிரிவினர் கோரி நின்றனர். கட்சியின் நியமனச் சட்டங்களை மாற்றி, ட்ரம்ப்புக்கு மாற்றான ஒருவரைத் தெரிவுசெய்வதே, அப்பிரிவினரின் நோக்கமாக அமைந்திருந்தது.

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வாசகமான "அமெரிக்காவை மீண்டும் அதிசிறப்பாக்குவோம்" என்பதை மாற்றி, "அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக்குவோம்" என அவர்கள் உரத்துச் சத்தமிட்டனர். எனினும், எதிர்ப்பாளர்களின் பக்கமாக, போதிய ஆதரவு காணப்பட்டிருக்கவில்லையென, கட்சியின் தலைவர்கள், ஒருமித்த கருத்தில் காணப்பட்டனர். இதனையடுத்து, எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு அதிகமானது. அதனையடுத்து அவர்கள், மாநாடு இடம்பெற்ற மாடியிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

இந்த மாநாட்டில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனைத் தாக்கி, உணர்வுபூர்வமான பேச்சாளர்கள் பலர் உரையாற்றினர். ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், இராஜாங்கச் செயலாளராக அவர் பணியாற்றிய போது, சிறப்பான பணியை ஆற்றவில்லை எனவும், இஸ்லாமிய ஆயுததாரிகளினால் அமெரிக்காவானது அச்சுறுத்தலுக்குள்ளாக அவரும் காரணமாகியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, 2012ஆம் ஆண்டு, லிபியாவின் பென்காசியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இஸ்லாமிய ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அதில் உயிரிழந்த ஒருவரின் தாய், "எனது மகனின் உயிரிழப்பு, ஹிலாரி கிளின்டனை நான் தனிப்பட்டரீதியாகக் குற்றஞ்சாட்டுகிறேன்" என இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .