2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

டி.ஐ.ஜி ரூபாவுக்கு இடமாற்றம்

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவெனக் குற்றஞ்சாட்டியிருந்த, கர்நாடகச் சிறைத்துறை உதவி ஆய்வாளர் (டி.ஐ.ஜி) ரூபா, திடீரென்றுப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே, சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகளை வழங்குவதற்காக, அவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடகச் சிறைத்துறை பொலிஸ் மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்யநாராயணராவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

இதன்பிரகாரம்,  உதவி ஆய்வாளர் ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்துப் பிரிவு ஆணையாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகச் சிறைத்துறை பொலிஸ் மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்யநாராயணராவுக்குப் பதிலாக, ஏ.எஸ்.என்.மூர்த்தி, சிறைத்துறை பொலிஸ் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், மாநில அரசாங்கம், தவறான மக்களையும் அவர்களுடைய தவறுகளையும் மூடிமறைப்பதில் கவனம் செலுத்தவதால், இவ்வாறான முடிவொன்றை எடுக்கும் என்று ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததாக, ஜனதா தளம் (மதசார்பற்ற) தலைவர் எச்.டி குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 

“சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரையும் தவறுகளை செய்யும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ​தேவை, அரசாங்கத்துக்கு உண்டு. உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கு, அரசாங்கம் ​மும்முரமாகச் செயற்படுவதில்லை” என்று அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, “ரூபா, பணியிட மாற்றம் செய்யப்பட்டமை, துறை ரீதியிலான நடவடிக்கை ஆகும். அனைத்தையும் ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் (அம்மா அணி) சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனிச் சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக, கர்நாடகச் சிறைத்துறை பொலிஸ் மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்யநாராயணராவுக்கு, 20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி ஆய்வாளர் ரூபா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ரூபாவைப் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சத்தியநாராயண ராவ், மாநில அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருப்பதாக, தகவல்கள் கசிந்துள்ளன.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .