2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

‘மனித உரிமை மீறல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உடந்தை’

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உடந்தையாக இருக்கின்றன என, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவுக்கு வர முயலும் ஆபிரிக்காவைச் சேர்ந்த அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக, லிபியாவுக்கான உதவிகளை, ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக வழங்கப்படும் இவ்வுதவிகள், லிபியாவின் கடலோரக் காவல் படையினருக்கு உதவுதல், லிபியாவின் தடுப்பு முகாம்களின் வசதிகளை அதிகரிப்பதற்கான மில்லியன்கணக்கான யூரோக்களை வழங்குதல் எனக் காணப்படுகிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முயன்று, லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 20,000 பேர், சித்திரவதைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட்ட வேலைக்கும் கப்பத்துக்கும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கும் ஆளாகின்றனர் என, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது.

“இந்தத் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் முழுமையாக அறியும் என்பதோடு, கடல் மூலமாகச் செல்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக லிபிய அதிகாரிகளுக்கு உதவுவதன் காரணமாக, இக்குற்றங்களில் அவர்கள் உடந்தையாகக் காணப்படுகின்றனர்” என, மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவித்தது.

ஐரோப்பாவுக்கு அகதிகள் செல்வதற்கான பிரதான வழியாக, லிபியாவே தொடர்ந்தும் காணப்படுகிறது. இவ்வாறு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை, அண்மைக்காலத்தில் ஒரளவுக்குக் குறைவடைந்துள்ள போதிலும், கடந்த 4 ஆண்டுகளில், 600,000க்கும் மேற்பட்டோர், இவ்வாறு லிபியாவிலிருந்து ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளனர் எனக் கணிக்கப்படுகிறது.

இவ்வாறு ஐரோப்பாவைச் சென்றடையும் அகதிகள் காரணமாக, தமது நாட்டில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் அரசாங்கங்கள், இவ்வகதிகள் வருவதைத் தடுப்பதற்காக, லிபியாவுடன் சேர்ந்தியங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X