2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது தடவையாகவும் சம்பியனானது சென்றலைட்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாண பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால், சென்றலைட்ஸ் அணி, 42 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக் கழக அணியை வென்று, தொடர்ந்து 3ஆவது முறையாகச் சம்பியனாகியது.

இருபதுக்கு-20 தொடரான இத்தொடரின் 4ஆவது பருவகாலப் போட்டிகள், ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழகங்கள், இத்தொடரில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த 4 அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணித் தலைவர் குலேந்திரன் செல்ரன், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதற்கிணங்கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணியினர், பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவ்வணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. பூபாலசிங்கம் டர்வின் 42, சுரேஸ் கார்த்தீபன் 33, நாகராசா ஜனோசன் 32, குலேந்திரன் செல்ரன் 26, ரவி வதூஸனன் 26, பத்திநாதன் நிரோஜன் 22, சின்னத்துரை ஜேம்ஸ் ஜான்சன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பி.பிறகோவன், 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

224 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி அணி சார்பில் விதுன் மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், மற்றைய வீரர்கள் கைகொடுக்காமையால் திருநெல்வேலி அணியின் போராட்டம் வீணாகியது. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி பெற்றது. துடுப்பாட்டத்தில் முத்துக்குமார் விதுன் அதிரடியாக 83 ஓட்டங்களையும், அபயராஜா ஜசீந்தன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரி.கோகுலன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, திருநெல்வேலி அணியின் விதுனும் தொடர்நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் ஜேம்ஸ் ஜான்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஜே.பி.எல் 1ஆவது பருவகாலத்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சம்பியனாகியதுடன், மிகுதி 3 வருடங்களிலும் தொடர்ச்சியாக சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .