2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் பாசையூர் சென். அன்ரனிஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு, ஆறாவது அணியாக பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். அன்ரனிஸ், சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்து கோல் பெறுவதனை நோக்காகக் கொண்டு இரண்டு அணிகளும் வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் அஜித், ஒரு கோலினை அடித்து தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், அடுத்த நான்காவது நிமிடத்தில் ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஜெகன், ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இந்நிலையில், தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதுஷன், கோலொன்றினைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், போட்டியின் 74 ஆவது நிமிடத்தில், அவ்வணியின் அருள்தர்சன் மேலுமொரு கோலினைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதி செய்ய, இறுதியில், 3-1 என்ற கோல்கணக்கில் சென். அன்ரனிஸ் வெற்றி பெற்றிருந்தது.

போட்டியின் நாயகனாக சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கஜகத்தின் சஜந்தன் தெரிவு செய்யப்பட்டு, அவரிற்கான பணப்பரிசு மற்றும் பதக்கத்தினை கழுகுகள் விளையாட்டுக் கழக ஆலோசகரும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான இ.சுகந்தன் வழங்கி கெளரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .