2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முரளிக்கிண்ண ஆரம்ப தின போட்டி முடிவுகள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்டப் போட்டிகள் வடக்கிலுள்ள மைதானங்களில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு கிழக்கு அணிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

போட்டிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஐ.ஓ.டி.ஆர் ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2 வருடங்களும் சென்.பீற்றர் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

ஆண்கள் போட்டி முடிவுகள்

கரந்தெனிய மத்திய கல்லூரி 84 ஓட்டங்களால் வெற்றி


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் கரந்தெனிய மத்திய கல்லூரியும், பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரி அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கரந்தெனிய மத்திய கல்லூரி 20 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. ரி.கே.ராஜரட்ண 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் கல்லூரி அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.


சீனிகம இணைந்த பாடசாலைகள் அணி 4 இலக்குகளால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை – மொனராகலை இணைந்த பாடசாலைகள் அணி, 19.1 பந்துபரிமாற்றங்களில் 122 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சீனிகம இணைந்த பாடசாலைகள் அணி 14.3 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

றிச்மண்ட் கல்லூரி 5 இலக்குகளால் வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் றிச்மண்ட் கல்லூரி அணியை எதிர்த்து திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த பாடசாலைகள் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை – மட்டக்களப்பு இணைந்த பாடசாலைகள் அணி 16.3 பந்துபரிமாற்றங்களில் 71 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் அணி 10 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி 8 இலக்குகளால் வெற்றி

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முல்லைத்தீவு – கிளிநொச்சி இணைந்த பாடசாலைகள் அணியை எதிர்த்து சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு – கிளிநொச்சி இணைந்த பாடசாலைகள் அணி 19.3 பந்துபரிமாற்றங்களில் 82 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பீற்றர்ஸ் அணி 10.5 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.


பெண்கள் போட்டிகள் முடிவு

சக்தி மகளிர் கல்லூரி அணி 79 ஓட்டங்களால் வெற்றி

மாங்குளம் வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டியில் சக்தி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் இளம் பெண்கள் கழக துடுப்பாட்ட அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சக்தி பெண்கள் அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு ஆடிய குருநாகல் இளம் பெண்கள் கழக துடுப்பாட்ட அணி 8.5 பந்துபரிமாற்றங்களில் 24 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

மிகுதி போட்டிகள் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (30) நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .