2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சம்பியனானது களுவன்கேணி இளங்கோ இளைஞர்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லே தொடரில், ஏறாவூர்ப்பற்று பிரதேச களுவன்கேணி இளங்கோ இளைஞர் கழகம் சம்பியனாகி மண்முனை மேற்கு எல்லே சவால் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது

மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்று, மண்முனை வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் அரையிறுதிப் போட்டியின் குறிஞ்சாமுனை சக்தி இளைஞர் கழகத்தை வீழ்த்தி சவுக்கடி ஆதவன் இளைஞர் கழக அணியும், ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழக அணியை வீழ்த்தி களுவன்கேணி இளங்கோ இளைஞர் கழக அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.

இந்நிலையில் நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்த சவுக்கடி ஆதவன் அணி 30 பந்துகளுக்கு ஆறு ஓட்டங்களைப் பெற்று இளங்கோ அணிக்கு ஏழு ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்குத் துடுப்படுத்தாடிய களுவான்கேணி இளங்கோ இளைஞர் அணி எட்டு பந்து மீதமிருக்க எட்டு வீரர்களை மாத்திரம் இழந்து மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றியிலக்கையடைந்தது.

இறுதியாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் ரி. சண்முகராசா, அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகத் தலைவருமான என். சுதன், மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் க. சசீந்திரன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அ. தர்ஷிக்கா ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கான பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது சிறந்த களத்தடுப்பாளருக்கான வெற்றிக் கிண்ணத்தை கி. கிசாளனும், சிறந்த துடுப்பாட்டவீரருக்கான வெற்றிக் கிண்ணத்தை எஸ். விதுசனும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .