சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ்

டில்கோ கொன்கியூறோஸ் அணியின் அல்பேர்ட் தனேஸ் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு இரண்டு கோல்களைப் பெற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக டில்கோ கொன்கியூறோஸ் அணி முடிசூடிக் கொண்டது.

இத்தொடரின் தகுதிச் சுற்றின் முதலாவது போட்டியில், டில்கோ அணி, கிளியூர் கிங்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி, மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியை வென்றது. இரண்டாவது இறுதிப் போட்டி அணியை தீர்மானிக்கும் மற்றுமொரு போட்டியில் கிளியூர் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது. இதில் கிளியூர் அணி வெற்றிபெற்றது.

டில்கோ, கிளியூர் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்றது.

போட்டி ஆரம்பமாகியதும் டில்கோ அணியின் ஆதிக்கம் கையோங்கியது. அருமையான கோல் பெறும் சந்தர்ப்பங்கள் இரண்டு தவறவிடப்பட்டன. ஓர் உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், மற்றையது பந்து கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது. இந்நிலையில், டில்கோ அணியின் அல்பேர்ட் தனேஸ் சிறப்பான கோலொன்றைப் பெற்றார். முதற்பாதி அக்கோலுடன் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதி ஆரம்பமாகியதும், கிளியூர் அணியின் ஆட்டத்தில் மாற்றம் தென்பட்டது. ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்த கிளியூர் அணி, எதிரணியின் கோல் கம்பங்களை அடுத்தடுத்து ஆக்கிரமித்தது. கிளியூர் அணியினரால் கோல் கம்பத்தை நோக்கி உதையப்பட்ட உதையொன்றை, டில்கோ அணியின் வீரரொருவர் கையால் தடுத்தார். இதனால், அவ்வீரருக்கு மத்தியஸ்தரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், கிளியூர் அணிக்கு பெனால்டி வாய்ப்பும் வழங்கப்பட்டது. அவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவ்வணியின் ஜோசப் மைக்கல் அதனைக் கோலாக மாற்றினார்.

சமநிலையில் ஆட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகையில், தனேஸ் மீண்டுமொரு மாயாஜாலத்தை மைதானத்தில் நிகழ்த்தினார். கிடைத்த ஒரு பந்தை பாய்ந்து தனது தலையால் முட்டி கோலாக மாற்றினார். அக்கோல் டில்கோ அணியின் வெற்றிக்கதவை தட்ட முடிவில் டில்கோ அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனானது.

இறுதிப் போட்டியின் நாயகனாக டில்கோ அணியின் தனேஸ் தெரிவானதுடன், தொடரின் சிறந்த கோல் காப்பாளராக டில்கோ அணியின் பௌசியனும் தொடரில் அதிக கோல்கள் பெற்ற வீரனாக டில்கோ அணியின் ஈவானா ஹன்சாரியும் தெரிவாகினர்.

 


சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.