2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இலங்கை தேசிய அணிக்கு வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்,கிரிசன்)


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெற்காசியப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை தேசிய அணிக்கு வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான வடமாகாண மாவட்டங்களின் 21 வயதுப்பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆரம்பமாகின. 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் மன்னார் மாவட்ட அணி, வவுனியா மாவட்ட அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது. 
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட அணி,  முல்லைத்தீவு மாவட்ட அணியை வென்றதுடன்,  நேற்றைய போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியை 6 : 0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

நேற்று நடைபெற்ற போட்டியில் மன்னார் மாவட்ட அணியை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்ட அணி மோதியது. தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக மோதின. அடிக்கடி மைதானத்தில் மஞ்சள் அட்டைகள் நடுவரால் காட்டப்பட்ட வண்ணம் இருந்தன. இரு அணிக்கும் கோல் போடும் வாய்ப்புக்கள் ஏற்பட்டும் அது கைகூடவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாண வீரர் யூட் தனி ஆளாக எதிரணியின் தடைகளை உடைத்து அணிக்கு முதலாவது கோலினை போட்டார்.

முதல் பாதி ஆட்டத்தில் 1 : 0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாண மாவட்ட அணி முன்னிலையிலிருந்தது.  இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும்  கோல் வாய்ப்புக்கள் பல தடவைகள் கிடைத்தன.  மன்னார் மாவட்ட அணி இறுதி நேரத்தில் மிக வேகமாக விளையாடி யாழ்ப்பாண மாவட்ட கோல் கம்பத்தினை நோக்கி அடிக்கடி முன்னேறியது. இருந்தும் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் தடுக்கப்பட்டன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் எதுவித கோல்களும் போடப்படாததினால் 1 : 0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.

வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணங்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .