2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜத் விஜயமுனி சொய்சாவுடன், இன்று (நேற்று-16) கலந்துரையா​டினோம் என்று தெரிவித்துள்ள, இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மேற்படி விவகாரம் தொடர்பில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள் என்றார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வுகள், கண்டி-பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.

இலங்கை கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில், இதயக்கனி நாளிதழின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

கண்காட்சியை, இந்திய தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

கண்காட்சியை திறந்துவைத்ததன் பின்னர், அங்கு வைத்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
“மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வூகள், அவர் பிறந்த ஊரான இலங்கையில்- கண்டியில் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்றை இலங்கை கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஏற்படுத்தி தந்துள்ளார். அதற்காக, அவருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார்.

எம்.ஜி.ஆர், பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது எனத் தெரிவித்த இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இலங்கையில் பாடசாலைகளுக்கும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் வழங்கப்படவுள்ளன என்றார்.

கல்வி இராஜாங்க அமைச்சர்

இதன்போது கருத்துரைத்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்,
இலங்கை- இந்திய மீனவ பிரச்சனையை தொடர்பில், இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில், இன்னும் ஓரிரு மாதங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

“எமது மீன்வளத்துறை அமைச்சரை நானும், தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்தோம். இதன்போது. எமது, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், சென்னை செல்வதாக தெரிவித்தார்” என்றார்.

சென்னையிலுள்ள மீனவர்களுடன் முதலில் சந்திப்பொன்று இடம்பெறும். அதன் பின்னர் டெல்லி அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். இதனூடாக இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--