2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளருக்கு அழைப்பாணை: ‘பின்னணி என்ன’

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

“யாழ்.  ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குற்றபுலனாய்வுத்துறையால் யாழ்.  ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், யாழ். ஊடகவியலாளர் அமையத்தில், இவ்வாண்டு மே மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற எனது ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான ஒலி, ஒளி நாடாக்களை கொண்டு, இம்மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள குற்றபுலனாய்வு அலுவலகத்துக்கு வருமாறும் அவ்விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்றதை 2 மாதங்கள் தாமதித்து கேட்பதன் நோக்கம் என்ன?

முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முதலமைச்சருக்கு எதிராக நான் முன்னணியில் நின்றேன்.

ஆகவே, என்னைக் கைது செய்வதன் மூலம் முதலமைச்சரை தனிமைப்படுத்தி அவரை பதவியில் இருந்து இறக்குவதற்கான சதித்திட்டமா? இல்லையெனில் அரை குறை அரசியல் தீர்வை மக்கள் மீது திணிக்க முற்படுகின்றபோது, எலும்புத் துண்டை மக்கள் மீது எறியும்போது, அதனை நாங்கள் கவ்வ வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அல்லது, தமிழ் மக்களின் தலைமை தாங்கள் தான் எனக் கூறிக்கொண்டு திரிபவர்கள், அரைகுறை தீர்வை ஏற்கின்றபோது, அதனை எதிர்த்து மக்கள் சார்பாகப் போராட்டங்களைச் செய்ய சிவாஜிலிங்கம் போன்றவர்கள் முன்னிணியில் நிற்பார்கள் என்கின்ற காரணத்தால் எங்களை போன்றவர்களை சிறையில் தள்ளுவதன் மூலம் அதனை அடக்க முடியும் என நினைக்கின்றார்கள்.

எங்களை அச்சுறுத்துவதன் மூலம், சிறையில் அடைப்பதன் மூலம் எங்களுடைய போராட்ட உணர்வை மழுங்கடிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் முதலமைச்சரை பதவிநீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டபோது மக்கள் எவ்வாறு மக்கள் கிளர்ந்தெழுந்தார்களோ அதேபோன்று மக்கள் கிளர்ந்தெழுவார்கள்” என தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .