2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு‘இராணுவ பயிற்சி அவசியம்’

Gavitha   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி  

இன்றைய சூழ்நிலையில், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாகச் ​செயற்பட வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு இராணுவக் களப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான், ஊடகவியலாளர்கள் அச்சமின்றிச் செயற்பட முடியும் என, பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

குறித்த அமைப்பின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே, தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “மேற்படி தாக்குதல் சம்பவம் ஏன் நடந்தது என்பது குறித்து ஆராய்வதை விட, இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் யார் நின்று செயற்படுகிறார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்னர் அதற்கான தீர்வை முன்வைக்க வேண்டும்” என்றார்.

“மாற்றம் வேண்டும், ஊடக சுதந்திரம் வேண்டும் என கூக்குரலிட்டீர்களே இப்போது உங்களுக்கு சந்தோஷமா? இது தான் நீங்கள் எதிர்பார்த்த ஊடக சுதந்திரமா? அன்று மறைமுகமாக நடைபெற்ற சம்பவங்கள் எல்லாம், இன்று நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும், தேரர் குறிப்பிட்டார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதமான பகுதிகள், சீனாவுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டு விட்டது. ​இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டில் தீய விடயங்கள் எவை நடந்தாலும்? முதலில் ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சினர் மீதே இந்த அரசாங்கம் பழி சுமத்துகிறது. அவர்கள், அரசாங்கத்தின் மீது பழி சுமத்துகின்றனர். இவ்வாறு மாறி மாறி பழி சுமத்திக்கொண்டிருப்பதில் எதுவும் நடக்கப்போவதில்லை” எனவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .