2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Kanagaraj   / 2016 மார்ச் 23 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு வருகைதந்ததாகக் கூறப்படும் ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே, இந்த மூவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மூவரில் இருவர், தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும் மற்றையவர் ஏனைய குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களினால், அந்நாடும் அந்நகரமும் முழு ஐரோப்பிய ஒன்றியமுமே அதிர்ந்தது. தலைநகரின் விமான நிலையமும் ரயில் நிலையமுமே இலக்குவைக்கப்பட்டு, தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விரு தாக்குதல்களிலும் 34 பேர் பலியானதுடன் குறைந்தது 170 பேருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகினர். விமான மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சகல பொதுச்சேவைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

இத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நாடு முழுவதும் நான்கடுக்கு பயங்கரவாத எச்சரிக்கையை பெல்ஜிய அரசாங்கம் விடுத்தது.

இலங்கை நேரப்படி நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஸவென்டெம் விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படுவதற்கான மண்டபத்துக்கு முன்பாக வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 14 பேர் பலியானதுடன் 85 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பொலிஸாரின் தகவலின்படி, தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர், உரத்த வெடிச்சத்தம் கேட்டதாக அந்நாட்டு தகவல் தெரிவித்தது.

விமான நிலையத்திலிருந்து விமானத்தை நோக்கிச் செல்லும் பகுதியிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், புறப்படுவதற்கான மண்டபத்துக்கு முன்பாக அமெரிக்க எயார்லைன்ஸ் மற்றும் ப்ரஸல்ஸில்
எயார்லைன்ஸ் ஆகிய இரண்டு விமானங்கள் தரித்து நின்றுள்ளன என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கன் எயார்லைன்ஸ், தங்களுடைய புறப்பாட்டு நிலையத்துக்கு அண்மையில் தாக்குதலேதும் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலை தொடர்ந்து, 79 நிமிடங்களின் பின்னர், மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டொன்று வெடித்தது. உரத்த வெடிச்சத்தத்தின் பின்னர் பாரிய புகை கிளம்பியது, தூசுகளால் அவ்விடமே நிறைந்திருந்தது.

இத்தாக்குதலில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, ஆகக் குறைந்தது 55 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில் நிலையம், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனக் கட்டங்களுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளதோடு, அவ்வாயுதக்குழுவின் ஆதரவாளர்கள், இந்தத் தாக்குதல்களை இணையத்தளங்களில் வரவேற்றுள்ளனர்.

விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக அங்கிருந்த ஒருவர் தெரிவிக்கையில், அங்கு வெடிப்புச் சத்தங்கள் இரண்டு கேட்டதாகத் தெரிவித்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து கண்ணாடிகள் உடைந்து சிதறிக் காணப்பட்டதோடு, தங்களுடைய பயணப் பொதிகளையும் எடுக்காமல், பயணிகள் சிதறி ஓடினர். 'மக்கள் என்ன செய்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை. நான் அதனை ஓர் உடற்பயிற்சியென நினைத்தேன்' என்றார்.

மற்றொருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நான் ஓடினேன், ஓடினேன். பணியாளரும் பொதிகளை காவிக்கொண்டு, என் பின்னாலேயே ஓடிவந்தார்' என்றார்.

நிதிச் சேவைகள் தொழிலாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

'உணவகங்களில் இன்னும் சிலர், மெதுவாக உணவு உண்டு கொண்டிருந்ததை உணர்ந்தேன். எனினும், எங்களுக்கு வெளியே ஒரு வழியை கண்டுப்பிடிப்பதற்கு, ஊழியர்கள் முயற்சித்ததையும் கண்டேன்' என்றார்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பயணிகள் அதிகமாகக் காணப்படும் நேரத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. காயமடைந்தவர்களுக்கு, பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வைத்தே உடனடியாகச் சிகிச்சையளிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சந்தேகநபரான சாலா அப்டெஸ்லாம், பெல்ஜியத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக, அவரது கைதைத் தொடர்ந்து, பல்வேறு ஆயுதங்களும் வெடிபொருட்களும் ப்ரஸல்ஸில் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது கைதுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களா இவை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களைக் கண்டித்த பெல்ஜியப் பிரதமர் சார்ள்ஸ் மைக்கல், இதுவொரு கறுப்பு நாள் எனத் அறிவித்தார்.

'நாங்கள் அஞ்சியது நடந்துவிட்டது. மோசமான தாக்குதல்களால் நாம் தாக்கப்பட்டோம். குருட்டு வன்முறை மற்றும் கோழைத்தனமானது. எமது நாட்டு வரலாற்றில் சோகமான தருணம்' என்றார். அத்தோடு, இந்தத் தருணத்தில், அமைதி காக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தின் அவசரக்குழுக் கூட்டமான நாகப்பாம்பு அவசரக்குழுக் கூட்டம், பிரித்தானிய பிரதமர் டெவிட் கமரோன் தலைமையில் நேற்றுக் கூடியது.

இந்த தாக்குதல்களை உலக நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளதோடு, இலங்கை அரசாங்கமும் கண்டித்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கண்டித்துள்ளார்.

இவ்விரு சம்பவங்களிலும் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று, இச்செய்தி அச்சுக்கு போகும் வரை வெளியான தகவலிலிருந்து தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .