2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

'ஒன்றுதான் உள்ளது என்றால் அது இலங்கை அல்ல'

Gavitha   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இருபது இனங்களையும் நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை மறந்தால், ஒரே இலங்கை என்பதை மறந்து விட வேண்டியதுதான்' என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, சிங்கள அரச ஊழியர்களுக்கான, தமிழ் பேச்சு மொழி பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதல் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஒரே மொழி, மதம், இனம் என்று தெற்கில் கூறினால், அந்தக் கோஷத்தை வடக்கிலும் எழுப்புவர். வடக்கில் அவ்வாறு எழுப்பப்படுமானால், தெற்கிலும் அதேபோன்ற கோஷம் எழுப்பப்படும். எனவே, இந்நாட்டில் நிலவுகின்ற பன்மைதன்மையை புரிந்து ஏற்றுக்கொள்வதுதான், நாம் ஒரே நாட்டவராக வாழ எஞ்சியிருக்கும் ஒரேயொரு வழி' என்று அவர் கூறியுள்ளார்.

'சிங்களவர், ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையக தமிழர், மலாய், ஒல்லாந்து பறங்கியர், போர்த்துக்கல் பறங்கி, வேடர், பரதர், மலையாளிகள், கடல் வேடர், தெலுங்கர், இலங்கை சீனர், தாவூத் போரா, மேமன், கொழும்பு செட்டி, பார்சி, சிந்தி, ஆபிரிக்க வம்சாவளி கப்ரிஞா, கோஜா ஆகிய இருபது இனத்தவர்கள், இலங்கையில் வாழ்வதாக எனது அமைச்சில் பதிவாகியுள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய நான்கு மதங்களும் இலங்கையில் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் யதார்த்தம். இந்த அடிப்படை உண்மைகள், இந்த நாட்டில் வாழும் நம்மில் சிலருக்கே தெரியாது.

அப்படியாயின்  வெளிநாட்டவருக்கு இவை தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
'அடுத்த வருடம், ஒவ்வொரு இனத்தின் கலாசார வரலாற்று அடையாளங்களையும் காட்சிப்படுத்தும் முகமாக, எனது அமைச்சு நாடு முழுவதும் நடத்தவுள்ள இலங்கை பன்மைதன்மை ஊர்வல நிகழ்வில், இந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்துவோம். அதன்மூலம், இலங்கை என்றால் என்ன என்பதை முதலில் நம் நாட்டவரே தெரிந்துகொள்ள முடியும். பிறகு வெளிநாட்டவரும் அறிய முடியும்.

உலகத்துக்கு, இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும், இலங்கை தமிழர்கள். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், உள்ளகரீதியாக, ஈழத்தமிழர், மலையக தமிழர் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. உலகத்துக்கு, தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளம் இருக்கின்றது. ஆனால், உள்ளகரீதியாக தமிழர், முஸ்லிம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன.

இந்தப் பரஸ்பர அடையாளங்களை அங்கிகரித்து, அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேவேளை, ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துக்குள் வருகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்' என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவர், இலங்கையில் எந்த ஒரு பாகத்திலும் சென்று தனது தாய்மொழியில் கருமமாற்றிகொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும். அதேபோல், சிங்கள மொழி மட்டும் தெரிந்த ஒருவர், தனது தாய்மொழியில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் எந்த ஒரு பாகத்துக்கும் சென்று தனது தாய்மொழியில் கருமமாற்றிகொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும். இதைப்பற்றி எழுதுவது, பேசுவதை போன்று செய்துகாட்டுவது இலேசான காரியமல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால், கஷ்டமான காரியங்களை செய்து பழக்கப்பட்ட எனக்கு, இதை செய்து காட்ட முடியும் என்று நம்புகிறேன். அடுத்த வருடம் எனது இந்த நோக்கத்துக்கு முக்கியமான வருடம்.

முதன்முதலாக இந்த மொழியுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை, மூன்று மொழிகளையும் எழுத, படிக்க, வாசிக்க, புரிந்துக்கொள்ள கூடிய ஒரு அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மொழிப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், அடுத்த கட்டத்துக்கு போக முடியாது' என்று அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .