2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கணக்காய்வாளர் திணைக்கள சட்டமூலம்: திருத்தமின்றி வந்தாலே ஜே.வி.பி ஆதரவு

Kogilavani   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'கணக்காய்வாளர் நாயகம் பதவி, கணக்காய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள், மட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலான சட்டமூலமானது,  நாடாளுமன்றத்தில் எவ்விதத் திருத்தமும் இன்றி கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டால் மாத்திரமே, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவளிக்கும்' என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

'இதில், மட்டுப்பாடுகள், அதிகாரக்குறைப்புக்கள் அல்லது அமைச்சர்களுக்குச்; சார்பான வகையில் மாற்றங்கள் ஏதேனும்  இடம்பெற்றிருப்பின், அவற்றை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கும்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'கணக்காய்வாளர் நாயகத்தின் பதவி, கணக்காய்வாளர் திணைக்களத்தின் பணி என்பவை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்து, குறித்த பதவி மற்றும் திணைக்களங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் மட்டுப்பாடுகள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சர்கள் பலரும் முனைகின்றனர்' என்றார்.

'மத்திய வங்கியின் ஊழல் கணக்குத் தொடர்பிலும், கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கைகள் தொடர்பிலும் போதிய தெளிவின்மை காணப்படுவதாக, கணக்காய்வாளர் பதவியின் மீதும் திணைக்களத்தின் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அந்தப் பதவி குறித்து மட்டுப்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர். ஆனால், கணக்காய்வாளரோ தனது பணியினை அவரது பதவியின் மட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் திறம்படச் செய்கின்றார்.

மக்கள் ஆணையைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களை விடவும் அவரது செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் அமைந்துள்ளன. கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்படுகின்ற பல விடயங்கள், அமைச்சர்களுக்கு கசப்பான விடயங்களாக உள்ளன' என்று அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X