2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் உலகச் சம்பியன்களாக இங்கிலாந்து

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன்களாக, இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. இந்திய அணிக்கெதிராக இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இறுதி நேரம் வரை போராடிய இங்கிலாந்து, மயிரிழையில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 228 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. 4ஆவது விக்கெட்டுக்காக சாரா டெய்லரும் நட்டாலி ஷிவரும் சிறப்பாக விளையாடி, 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்ட அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. இறுதி நேர ஓட்டங்கள் காரணமாகவே, 228 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நட்டாலி ஷிவர் 51 (68), சாரா டெய்லர் 45 (62), கத்தரின் பிரண்ட் 34 (42) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜூலன் கோஸ்வாமி 3, பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தங்களது முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு, 229 ஓட்டங்களைப் பெற்றால் போதுமானது என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களுக்கே இழந்தது. ஆனால், 2ஆவது விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களும் 3ஆவது விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களும் 4ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களும் பகிரப்பட்டன. 3 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 43 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்த அவ்வணி, 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் பூனம் றௌட் 86 (115), ஹன்மன்பிறீட் கெளர் 51 (80), வேதா கிருஷ்ணமூர்த்தி 35 (34) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அனியா ஷ்ரப்சோல் 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெண்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் கைப்பற்றப்பட்ட முதலாவது 5, 6 விக்கெட் பெறுதியாக இது அமைந்ததோடு, சிறந்த பந்துவீச்சுப் பெறுபேறாகவும் மாறியது. தவிர, அலெக்ஸ் ஹார்ட்லி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகியாக, அனியா ஷ்ரப்சோல் தெரிவானார். தொடரின் நாயகியாக, இங்கிலாந்தின் தம்மி பியூமொன்ட் தெரிவானார். தெரிவானார்.

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில், இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்ற 4ஆவது தடவை இதுவாகும். அதிக தடவைகள் வென்ற அணியாக, 6 தடவை வென்ற அவுஸ்திரேலிய அணி காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .