2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

‘சட்டத்தின் பாதுகாவலனை சுட்டுக் கொல்ல முடியாது’

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும் இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும். இதனை நான் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன” என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“உண்மையான சட்டத்தை பாதுகாக்கின்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைச்செய்ய முடியாது. அது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டத்துறைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சிலருடைய திட்டமிட்ட ஒரு செயலாகவே இதனை கருத வேண்டியுள்ளது.  

“சட்டத்தின் முன் அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் நீதிபதி இளஞ்செழியன் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். கடந்த காலங்களில் அவர் கொடுத்துள்ள பல தீர்ப்புகள் இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.  

“தற்பொழுது நடைபெற்று வருகின்ற வித்யாவின் கொலை வழக்கு தொடர்பாகவும் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், அவரை முடக்குகின்ற அல்லது பயமுறுத்துகின்ற ஒரு செயலாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது.  

“ஆனால், நீதிபதி இளஞ்செழியன் இதனையெல்லாம் கண்டு அஞ்சமாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. எனவே, இவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். அதேபோல இலங்கையில் சட்டத்தை நிலை நாட்டவேண்டும் என கருதுகின்ற அனைவருடைய ஒத்துழைப்பும் இவருக்கு கிடைக்கவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

“அந்த இறைவனுக்கே பொறுக்காத ஒரு செயலை செய்ய முற்பட்ட காரணத்தால் அவருடைய உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய மெய் பாதுகாவலரின் மறைவானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் இந்தச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .