2021 ஜனவரி 23, சனிக்கிழமை

‘சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிப்பு’

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் வெற்றி உறுதியாகிவிட்டதெனத் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, “தற்கொலைதாரியான சஹ்ரானின் மனைவியை வைத்து, எமக்கெதிராக சேறுபூசும் வீடியோ தயாரிக்கப்படுகின்றது” என்றார். 

நாவலப்பிட்டிய மஹிந்தானந்த மன்ற நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (07) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தோல்வியை தாங்கிக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், புதிய ஜனநாயக முன்னணியினருக்கும் முடியாது. ஆகையால், எமக்கெதிரான சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், அதனோர் அங்கமாக, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்திருந்த, சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். 

அந்த வீடியோவை, நவம்பர் 13ஆம் திகதியன்று கசியவிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனூடாக, சஹ்ரானுக்கும் கோட்டா, மஹிந்தவுக்கும் இடையில் நெருங்கிய உறவொன்று இருந்ததாக, காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றார். 

கோட்டாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கவிருப்பதாக, ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். எங்களுக்கு எந்தவோர், இரண்டாவது விருப்பு வாக்கும் தேவையில்லை. ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையில்லை என்றார். 

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, சிறுபான்மையின மக்களின் எந்தவோர் ஆதரவும் தனக்குத் தேவையில்லையென, கோட்டாபய ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .