2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தகவலறியும் ஆணைக்குழு விவகாரம்: பெப்ரவரி 4 இல் சந்தேகம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அன்றைய தினத்தில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. 

தகவலறியும் உரிமை தொடர்பில் உறுப்பினர்களை நியமித்து, ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதியன்று கூடிய அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்திருந்தது.  

தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிர்வாக அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் சிறந்த உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களின் நோக்கமாக இருந்தது. 

இந்நிலையிலேயே, தகவலறியும் உரிமை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவில் ஐவர் அடங்குகின்றனர். அரசியலமைப்புப் பேரவையானது மூவரை முதலில் பரிந்துரைத்தது. அதற்கு அமைவாக அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியமித்திருந்தார்.   அந்த ஆணைக்குழுவில், நீதிபதி ஏ.டபிள்யூ.எம் சலாம், சட்ட நிறுவனத்தின் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவரையும், அரசியலமைப்புப் பேரவை, புதிதாகப் பரிந்துரை செய்திருந்தது. எனினும், அவ்விருவரும் நேற்றுவரையிலும் தங்களுடைய பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. 

இந்நிலையிலேயே, தகவலறியும் உரிமை ஆணைக்குழு, தனது செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த ஆணைக்குழு தன்னுடைய செயற்பாடுகளை, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆணைக்குழுவின் செயற்பாடுகளை 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு பின்னரே ஆரம்பிக்க முடியுமென தான் கருதுவதாக, ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் ரவீந்திர தெரிவித்தார். 

“தகவலறியும் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பின்பற்றவேண்டிய ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அவற்றை, வர்த்தமானியில் பிரசுரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.  

சிவில் உத்தியோகத்தரான மஹிந்த கம்மன்பில தலைமையில், சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா, கிசால் பிந்து ஜயவர்தன ஆகியோர், அவ்வாணைக்குழுவின் முதலில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .