2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நல்லூர் சூட்டுச் சம்பவம்:‘சூத்திரதாரிகளைப் பாதுகாக்க முயற்சியா?’

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
“தன்னைக் குறி வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டது என, நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ள நிலையில், சூட்டுச்சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நீதிபதியைக் குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளமை, சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்கு முயல்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலைக்கண்டித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று விடுத்த கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளையும், பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளையும், அரசியல் கட்சிகள் என்னும் போர்வையில் துணை இராணுவக்குழுவாக இயங்கியவர்களுக்கு எதிரான வழக்குகளையும், மிகத் துணிச்சலுடன் கையாண்டு தண்டனை வழங்கியவர், இளஞ்செழியன்.

நீதிபதி இளஞ்செழியன், மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக இருந்து, அவரது பாசறையில் வளர்ந்தவர். உண்மை, நேர்மை, துணிச்சல், நீதி என்பவற்றுக்குக் கட்டுப்பட்டு, மக்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிருக்கின்றார்.

“அவர், வவுனியாவில் நீதவானாகப் பதவியேற்ற காலப்பகுதியில், யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில், அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வவுனியாவில் இயங்கிய துணை இராணுவக் குழுக்களின் கடத்தல், கப்பம் கோரல், சித்திரவதைகள் போன்றவற்றை, இயன்றளவுக்குக் கட்டுப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பைப் பெற்றார்.

“அன்று முதல் இன்றுவரை அச்சுறுத்தல்களுக்கும் அநியாயத்துக்கும் அடிபணியாத நீதிபதி இளஞ்செழியன், யுத்தத்தின் பின்னர் ஒட்டுமொத்த நாட்டையும் கொதிப்படைய வைத்த வித்தியா என்ற மாணவியின் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு, நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதிலும், தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.

“இந்நிலையிலேயே, அவர் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர், துப்பாக்கியைக் கையாள்வதில் மிகுந்த அனுபவம் மிக்கவர் போன்றே துப்பாக்கியைக் கையாண்டார் என்றும், தன்னைக் குறிவைத்தே தாக்குதல் முயற்சி நடைபெற்றது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

“எனினும், அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என, பொலிஸார் அவசரப்பட்டு இவ்வாறு கூறுவதன் மூலம், பொதுமக்களுக்குப் பொய்யான தகவலை வழங்கி, அவர்களது கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், இந்தக் கொலை முயற்சியின் பின்னால் இருக்கக்கூடிய சூத்திரதாரிகளைப் பாதுகாப்பதற்கும் முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டிப்பதாகவும், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சேவையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாகவும், அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .