2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'நானே ஆரம்ப துடுப்பாட்ட வீரன்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

ஒன்றிணைந்த எதிரணியினரால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பாதயாத்திரை தொடர்பிலும், அப்பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கடக்கும் போது, 'ஹூ' சத்தமிட்டது தொடர்பிலும், அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது, குறித்த பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் காட்டிக்கொடுக்காத வகையிலேயே அவரது கருத்துக்கள் அமைந்ததால், 'நீங்கள் நன்றாக பந்தைப் பரிமாற்றுகின்றீர்கள்' என்று ஊடகவியலாளர்கள் கூறினர். இதற்கு புன்னகையுடன் பதிலளித்த அமைச்சர், 'ஆம், எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியும். நான் தான், ஆரம்பத் துடுப்பாட்ட வீரன்' என்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'பாதயாத்திரை விடயத்தில், எவரும் குழப்பமடையத் தேவையில்லை. அரசியல் விவகாரத்தில், நாம் மிக அவதானமாகவும் பொறுமையாகவும், அனைத்து விடயங்களையும் கையாள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. சுதந்திரக் கட்சிக்குள், இருவேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இந்த கருத்து முரண்பாடுகள், புதிய மற்றும் பழைய என்ற விடயங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சவால்களுக்கு முகங்கொடுத்தால் தான், முன்னேறிச்செல்ல முடியும்' என்றார்.

'கட்சி அலுவலகம் முன்பாக 'ஹூ' சத்தமிட்டவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அவ்வாறு செய்தார்கள் என்றால், அது தொடர்பில் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தின் போது, தீர்மானம் எடுக்கப்படும். கட்சியையும் தலைவர்களையும் கேவலப்படுத்துவோருக்கு, இந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்' என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்போது, உலக நாடுகளிலிருந்த சர்வாதிகளுக்கு என்ன நடந்ததோ, அதுவே, இந்த இருவருக்கும் நடக்கும்' என்று, பாதயாத்திரையின் முடிவின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில், அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'இந்த அரசாங்கத்தில், சர்வாதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .