2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொசன் விபத்துகளில் பத்து பேர் பலியாகினர்

Kogilavani   / 2017 ஜூன் 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் தினமான, நேற்றுக் (09) காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள், நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற விபத்துகளில், பத்து பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.   

பேலியகொடை, தெஹிவளை, கும்புகெட்டே, பிலியந்தல, அநுராதபுரம், கஹாவத்தை, எல்ல மற்றும் ஹபரண ஆகிய இடங்களிலேயே, இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.  

அதில், இரண்டு சம்பவங்கள் ரயில் ரயில் விபத்துகளில் ஒன்று, களனிக்கும் வனவாசலுக்கும் இடையில், புதன்கிழமை பிற்பகல் 2:15க்கு இடம்பெற்றுள்ளது. பொல்ஹாவெலயை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, 42 வயதான நபரொருவர் பலியாகியுள்ளார். அடையாளம் காணமுடியாத அவருடைய சடலம், ராகம வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

தெஹிவளை, முஹாந்திரம் வீதிக்கும் அண்மையில், அன்றையதினமே பிற்பகல் 2:50க்கு இடம்பெற்ற மற்றுமொரு ரயில் விபத்தில், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இஷான் திரங்க பெரேரா (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளார்.   

இதேவேளை, கும்புக்கெட்டே இப்பாகமுவ மடல்கல வீதியில், பயணித்த மோட்டார் சைக்களில் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சைக்கிளில், புதன்கிழமை பிற்பகல் 2:20க்கு மோதி விபத்துக்குள்ளானதில் 72 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.  

இந்தச் சம்பவத்தில், காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவரும், பின்னால் அமர்ந்திருந்து சென்றவரும். படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

பிலியந்தலையில், கொழும்பு-ஹொரனை வீதியில், நேற்று (08) அதிகாலை 4:40 மணியளவில், இடம்பெற்ற வாகன விபத்தில், 33 வயதான ஷேன் ரொனஸ் பலியாகியுள்ளார்.   

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியது.   
இதேவேளை, அநுராதபுரத்தில் மட்டும் நேற்றையதினம் (08) மூன்று பாரிய விபத்துகள் இடம்பெற்றுள்ளன.  

அதிலொன்று, அநுராதபுரம் தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3:40க்கு இடம்பெற்ற விபத்தில், மதவாச்சியை சேர்ந்த 30 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.   

அநுராதபுரம் கவலக்குரம் பகுதியில், மோட்டார் சைக்கிளொன்றும் காரொன்றும் நேருக்கு நேர், நேற்று (08) அதிகாலை 12:30 க்கு மோதி விபத்துக்குள்ளாது.  

இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த, மாத்தளை ரத்முத்துகம கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த (வயது 29) என்பவர் பலியாகியுள்ளார்.  

இதேவேளை, கஹவத்தை-பெல்மதுல்ல நோனாகம பகுதியில் நேற்று (08) அதிகாலை 4:30 மணியளவில், முச்சக்கரவண்டியுடன் கெப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த 57 வயதான புஞ்சு நோனா என்பவர் பலியாகியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   

இந்நிலையில், அநுராதபுரம் புதிய கண்டி வீதியில், கெப்ரக வாகனமொன்றும், மோட்டார் சைக்கிளும் நேற்று அதிகாலை மோதி விபத்துக்கு உள்ளானதில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் பலியானார்.   

பொசன், போக்குவரத்து கடமையை முடித்து கொண்டு, பொலிஸ் நிலையத்துக்கு திரும்பி கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 29 வயதான புத்திக அரவிந்த பண்டார என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.   

அந்த கெப்ரக வாகனம், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சுக்கு சொந்தமானது என்றும், அந்த வாகனத்தை அமைச்சரின் செயலாளரே பயன்படுத்திவருகின்றார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், ஹாலிஎல- பெரகல வீதியில் நேற்றுக் காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 73 வயதான காருமேகன் யோகம்மா என்பவர் உயிரிழந்துள்ளார்.   

அப்பெண், வீதியில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வீதியால் பயணித்த முச்சக்கரவண்டியே அவர்மீது மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.  

இந்நிலையில், ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் நேற்றுக்காலை 7:50க்கு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்ற, 23 வயதான கவிக்ஷ விஜயசேகர உயிரிழந்துள்ளார்.   

தனக்கு முன்னால் பயணித்துகொண்டிருந்த லொறியை முந்திசெல்வதற்கு முயன்றபோதே, சைக்கிளுக்கு பின்னால் வந்த கார், மோதியதில், ஏற்பட்ட விபத்தையடுத்து, அவர் உயிரிழந்தார் என்று ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .