2025 ஜூலை 12, சனிக்கிழமை

’பயங்கரவாதம், அடிப்படைவாதம் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவேன்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார்கள் விடுத்துள்ள வேண்டுகோளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இவர்களின் இந்த வேண்டுகோளை தமது அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்ததும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாட்டுக்குள் மக்கள் சுந்திரமாக வாழும் நிலைறை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தான் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயர்களின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (25) அறிக்கையொன்றை வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தாக்குதலால் கத்தோலிக்க மதகுருமார்களின் வேதனையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முழு நாட்டையும் துன்பத்துக்கு உள்ளாக்கி அப்பாவி மக்களை உயிர்களை காவுகொண்டு, பலர்  மோசமான முறையில் காயமடைவதற்கு காரணமாக அமைந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாக கத்தோலிக்க மதகுருமார்கள் அடைந்துள்ள அசௌகர்யம் மற்றும் துன்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

“இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்கள் மற்றும் அது தொடர்பான சதித்திட்டங்களை மேற்கொண்டவர்கள், அதனை ஏற்பாடு செய்தவர்கள், ஒத்தாசை புரிந்தவர்கள், பொறுப்புகளை பாராது தமது கடமையில் இருந்து தவறியவர்கள், சந்தேக நபர்களை கைதுசெய்யாமல் அல்லது கைது செய்து விடுவித்தவர்கள் உள்ளிட்ட குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அதிகாரம் உள்ள, மக்கள் அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, அவர்கள் தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“பேராயரின் இந்தக் கோரிக்கையானது, துன்பத்துக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் தொடர்பானது மாத்திரமின்றி முழு நாட்டு மக்களின் நலனுக்காகவே என்று நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன்.

“அத்துடன், இவ்வாறான ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர்களின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை 3 வருடங்களில் ஒழிப்பதற்கு முன்னின்று அர்ப்பணிப்பு செய்த எனக்கு இந்த காரணங்களை சிறப்பாக புரிந்துக்கொள்ள முடிகின்றது. பேராயரின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

“மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் பயமின்றி வாழக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கு எம்மால் முடியும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கவேண்டும் என்ற பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளை, எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதுடன், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் இல்லாத நாட்டுக்குள் அச்சம், சந்தேகம் இன்றி நாட்டு மக்கள் வாழும் உரிமையை பெற்றுக்கொடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .