2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மகனை பார்வையிட்டார் மஹிந்த

Gavitha   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.

மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

70 மில்லியன் ரூபாயினைத் தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலமளிக்க வருமாறு, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நாமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அது குறித்து வாக்குமூலமளிப்பதற்காக நாமல் எம்.பி, மேற்படி பிரிவுக்கு நேற்றுத் திங்கட்கிழமை சென்றிருந்தார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவும், நேற்றைய தினத்தில், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தனர்.

மேற்படி பிரிவிடம் வாக்குமூலமளித்த கோட்டாபய ராஜபக்ஷ, முன்னதாக அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, குமார் வெல்கமவும் தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டு வெளியேறினார். இருப்பினும், நாமல் ராஜபக்ஷ பல மணித்தியாலங்களாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டில், றக்பி தொடரொன்றை ஏற்பாடு செய்வற்காக 'கிரிஷ்' என்ற நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றார் என்றும் அதனை அவர் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே, அவரிடம் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையிலேயே நிதிச் சலவைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, மேற்படி நிதியினை, நாமல் எவ்வாறு பயன்படுத்தினார் என்று தெரிவிக்கத் தவறியமை காரணமாக, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், மேற்படி 70 மில்லியன் ரூபாய், நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .