2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மீள் காப்புறுதி முறைக்கு அமைச்சரவை அனுமதி

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

இயற்கை அனர்த்தம் மற்றும் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்காக மீள் காப்புறுதிக் கம்பனியொன்றைத் தெரிவு செய்வதற்கும், அதற்காக தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதற்கும், உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார் 

அவர் தொடர்ந்து கூறுகையில், “2016ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய, நாட்டில் ஏற்படுகின்ற சூறாவளி, பூகம்பம், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்காக நாடு பூராகவும் உள்ளடங்கும் வகையில் தேசிய காப்புறுதி நிதியத்தின் கீழ் காப்புறுதி முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  

இக்காப்புறுதி முறையின் கீழ் தற்போது பெற்றுக் கொள்ள முடியுமான கொடுப்பனவை அதிகரித்து மிகவும் வெற்றிகரமான காப்புறுதி முறைமையாக விருத்தி செய்வதற்காக 2017ஆம் ஆண்டின் வரவு - செலவு திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  

அதனடிப்படையில் மின்னல் தாக்குதல்களினால் ஏற்படுகின்ற உயிர் ஆபத்துக்கள், பல்வேறு திரவியங்கள் பிரஜைகளின் மீது வீழ்வதினால் ஏற்படுகின்ற உயிர் ஆபத்துக்கள், பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால் ஏற்படுகின்ற சொத்து சேதங்கள், பலத்த மழையினால் மதில்கள் உடைந்து வீழ்வதால் ஏற்படுகின்ற சொத்து சேதங்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு நட்டஈடு வழங்குவதையும் உள்ளடக்கி நிதியுதவிகளை அளிப்பதை வியாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இக்காப்புறுதி செயன்முறையின் கீழ் தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் 15 பில்லியன் ரூபாய் காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிதியத்துக்கு கிடைக்கும் மேலதிக இலாபத்தை தடுக்கும் நோக்கில் மீள் காப்புறுதி முறைமையினை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் மீள் காப்புறுதி கம்பனியொன்றை தெரிவு செய்வதற்கும், அதற்காக தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதற்கும், உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்திருந்தார்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .