2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மீனவர் பிரச்சினை குறித்து மஹிந்தவுடன் நாளை பேச்சு

George   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வடமாகாண மீனவ சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை மீன்பிடித்துறை அமைச்சர்  மஹிந்த அமரவீர கவனத்தில் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சருடன் கொழும்பிலுள்ள மீன்பிடித்துறை அமைச்சில் நாளை புதன்கிழமை (13) காலை இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் தான் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை இந்திய மீனவர் பேரவையின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

வடமாகாண மீனவ சமாசங்களின் தலைவர், இலங்கை மீனவ பிரதிநிதிகள் குழு உள்ளிட்டவர்கள், ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்திருந்தார்.

அதன் முதற்கட்டமாக அமைச்சருடன் இன்றைய சந்திப்பு அமையவுள்ளது என அந்தோனிமுத்து கூறினார். இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வடபகுதி மீனவர்கள் சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி தரவேண்டும்  என இந்திய மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். எனினும், இந்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் முற்றாக நிராகரிக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை மற்றும் மீன்பிடி முறைகளால் இலங்கையின் கடல்வளம் அழிவடைந்து வருவதுடன், இலங்கை மீனவர்களின் குறிப்பாக, வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை - இந்திய மீனவர்களின்  இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ள இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்தியா மற்றும் இலங்கையில் முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

முதலாவது பேச்சுவார்த்தை 2014ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையிலும் தொடர்ந்து மே மாதம் 13ஆம் திகதி கொழும்பிலும் 2015ஆம் ஆண்டு சென்னையிலும் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கை கடற்பரப்பில் வாரத்தில் சிலநாட்கள், வருடத்தில் பல நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இலங்கை மீனவர்கள் இந்த கோரிக்கையை மறுத்ததால் பேச்சுவார்த்;தை நிறைவின்றி முடிவடைந்தது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதே இருநாட்டு அரசாங்கங்களின் நிலைப்பாடாகும்.

மீனவர் பிரச்சினைக்காக இந்தியாவுடன் யுத்தம் செய்ய முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் நாடாளுமன்றில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பில் வடமாகாண சபை உரிய அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்தும் தமது பிரச்சினைக்கு  விரைவில் தீர்வு வேண்டும் என்று கோரியும் வடபகுதி மீனவர்கள் நேற்று காலை வடமாகாண சபை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .