2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மாவீரர் தினம் கொண்டாட ‘எதுவித தடையுமில்லை’

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2010ஆம் ஆண்டுக்கு முன்னர், வடமாகாணத்தின் நிர்வாகங்கள் சரியாக இயங்கியுள்ளன. எனினும், 2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறு இயங்கவில்லை” என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.   

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி, வைபவ ரீதியாக, நேற்று (22) காலை திறந்து வைக்கப்பட்டது.   

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“நடந்தவை நடந்துவிட்டன. எதிர்காலத்தில் ஒன்றிணைந்து, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பில், அரச அதிகாரிகள் அக்கறை கொள்ளவேண்டும். மக்களுக்கான சேவையில், எந்நேரமும் ஈடுபட வேண்டும். உள்நாட்டு அலுவல்கள் தொடர்பில், நாடளாவிய ரீதியில், நடமாடும் சேவையை மேற்கொண்டு வருகின்றோம். அண்மையில் பொலன்னறுவையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

காலி மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த நடமாடும் சேவையை, விரைவில் கிளிநொச்சியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.  

“வடமாகாணத்தில் இன்னமும் 70 சதவீதமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும். வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்பவேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைக்கு அது உறுதுணையாக இருக்கும்.   

“மேலும், மாவீரர் தினம் கொண்டாடப்பட்டமை தொடர்பில் பலரும் பல கருத்துகளை, விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் அதனை நாங்கள் அதனை சரி என கூறுகின்றோம். 1971, 1987, 1988ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களை நினைவு கூருவதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லையே. எமது மதங்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, அதனைச் செய்யலாம். 

2010ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தில் நிர்வாகங்கள் சரியாக இயங்கியுள்ளது. எனினும், 2010 ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறு இயங்கவில்லை. 10 வருடங்களாக மஹிந்த சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் எந்த விதமான அபிவிருத்தியும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தற்போது அனைத்தும் படிப்படியாக சரியாகி வருகிறது” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--