2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யுத்த விசாரணை;நிபுணர் குழுவிற்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறுகிறது-ஐ.நா

Super User   / 2010 மே 30 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழுவிற்கான உறுப்பினர்கள் தெரிவு  இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கான செயலில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஈடுபட்டுள்ளார். 

எனினும், இந்த நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில், மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக  தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ மூனிடம், இலங்கை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டிருந்தபோதிலும், அவை பயனளிக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இதன்போது, பாரியளவில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--