2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’வடக்கிலேயே அதிக விபத்துகள் பதிவு’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 மே 31 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த வருடத்தில் மாத்திரம், வீதி விபத்துக்களால் 2,900பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 7,500க்கும் மேற்பட்டோர், தங்களது அவயவங்களை இழந்துள்ளனர் என்றும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் சம்பவித்துள்ளன” என்றும் தெரிவித்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், “இவ்விபத்துக்களில் அதிகமானவை, வடமாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன” என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது,

“விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 15ஆம் திகதியன்று, பல்வேறு சட்ட ஒழுங்குகள், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. குறிப்பாக, வடமாகாணத்துக்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு 40 சதவீதமும் தனியார் பஸ்களுக்கு 60 சதவீதம் என்ற வகையில் பஸ் சேவைகளை ஒழுங்கு செய்யவும் அதனடிப்படையில், இணைந்த நேர அட்டவணையைத் தயார் செய்து அமுல்படுத்துவது தொடர்பிலும் விசேட அறிவுறுத்தல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக, 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருடச் சிறைத்தண்டனையை வழங்கவோ அல்லது அவ்விரு தண்டனைகளையும் வழங்கவோ நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில், ஏறக்குறைய 195 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற புதிய பஸ் நிலையத்தை மீள இயங்கவைப்பது தொடர்பிலும், அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து, எமது மாகாணத்தை, வீதி விபத்துகள் அற்ற மாகாணமாக மாற்றுவதற்கும் அதியுச்ச போக்குவரத்துச் சேவையினை வழங்குவதற்கும், ஒத்துழைக்க வேண்டும்” என, அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .