2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

விடைபெற்றார் சீனத் தூதுவர்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷெங்க் ஷியூஆன், தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நாடு திரும்பவுள்ளார். முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து, விடைபெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பு, நேற்று (27) மாலை, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர், இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என்று கூறினார்.

இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள் காணப்படுவதாகவும் கூறிய தூதுவர், தனது புதிய பதவியிலும் இலங்கைக்குத் தன்னாலான அனைத்துவித உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு வழங்கிய ஆதரவுக்காக, இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சீனாவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட கறுப்புத் தேயிலைத் தொகுதிக்கும் நாடு பூராகவும் நடைபெற்ற ஆசிர்வாதப் பூஜைகளுக்காகவும், தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வைரஸ் தொற்று உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புதிதாகப் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

தூதுவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களிலும் இலங்கைக்கு உதவிகளைச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். கொழும்பு - இரத்தினபுரி அதிவேகப் பாதை, சூரிய மற்றும் காற்று விசையினால் தொழிற்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தி வலுத்திட்டம் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பாகவும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளை செய்து கொடுப்பதாகவும், ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .