2021 ஜனவரி 20, புதன்கிழமை

13ஆவது திருத்தம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?: ரணில்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

13ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப்பகிர்வு ஸ்திரப்படுத்தப்பட்டு ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவரப்படும் என இந்த அரசாங்கம் ஐ.நா.வுக்கும் இந்தியாவுக்கும் உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் தற்போது வெவ்வேறு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

2009ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகமும் மஹிந்த ராஜபக்ஷவும் 13ஆவது திருத்தம் மற்றும் நிரந்தர சமாதானம் ஏற்படுத்துதல் தொடர்பில் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இதே கருத்தை வலியுறுத்தி இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு 2011ஆம்; ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கூட்டறிக்கையையும் வெளியிட்டது.

அரசாங்கம் காலத்துக்குகாலம் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளபோதிலும், இப்போது வேறு விதமான கருத்துக்களை நாம் கேட்கின்றோம்.  அரசாங்கத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ 13ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இது மட்டுமன்றி அரசாங்கம் சார்பான அரசியல் கட்சிகளும் இதே கருத்தை வெளியிட்டுவருகின்றன. ஜாதிக ஹெல உறுமய இந்தக் கருத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ஸ 13ஆவது  திருத்தத்தை இரத்துச் செய்வதற்காக ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதான அரசாங்க கொறடாவான தினேஷ் குணவர்தனவும் அவரது தலைமையிலான முன்னணியும் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யக் கோருகின்றது.

இதன் அர்த்தம் அரசாங்கம் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிவிட்டது என்பதா? அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள், கூட்டுக்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை வெளியிடுகின்றனவா? அரசாங்கத்துக்குள் இருந்து முரண்பாடான கருத்துக்கள் வெளிவருவது சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியையும் சங்கடத்தையும் உண்டாக்கும்.

எனவே இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன்.

ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதியும்  இந்திய அரசாங்கத்துடன் 2011ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி  வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை அரசாங்கம் இப்போது நிராகரிக்கின்றதா? அப்படியாயின் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று வினவினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .